நியூசிலாந்தில் ஏற்கனவே அமுல் படுத்தப் பட்ட நாடு தழுவிய லாக்டவுனானது குறைந்தது வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்துக்குப் பின் முதன் முதலாக நியூசிலாந்தில் அதிவேகமாகப் பரவக் கூடிய டெல்டா வகை கொரோனா திரிபு வைரஸானது 35 உள்ளூர் வாசிகளிடம் இனம் காணப் பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அதிகளவு தொற்றுக்கள் இனம் காணப்பட்ட ஆக்லாந்தில் லாக்டவுனானது இந்த மாத இறுதி வரை தொடரும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். மேலும் எமக்கு அதிக தகவல்கள் தேவைப் படுவதாகவும், டெல்டா மாறுபாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இன்னும் சில நாட்களில் இப்புதிய தொற்று உச்சக் கட்டத்தை அடைந்து அதன் பின் குறைந்து விடும் என்றும் ஜசிந்தா ஆர்டெர்ன் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பம் முதற்கொண்டே கொரோனா தொற்றை வெற்றிகரமாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் 20% வீதமானவர்களே தடுப்பு மருந்தை முழுமையாகப் பெற்றவர்கள் ஆவர். இதனால் தான் அங்கு தீவிர நாடு தழுவிய லாக்டவுன் அமுல் படுத்தப் பட்டுள்ளது.
மேலும் சில முக்கிய உலகச் செய்திகள் :
மெக்ஸிக்கோவை சனிக்கிழமை கிரேஸ் என்ற சூறாவளி தாக்கியது. இதில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கனமழையும் வெள்ளமும் ஏற்பட்டது. பல வீடுகள் பலத்த சேதமடைந்து நகரின் பல பகுதிகளிலும் மின் துண்டிப்பும் ஏற்பட்டது. மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 8 பேர் வரை பலியானதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஹைட்டியை புரட்டிப் போட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 2207 ஆகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 12 268 ஆகவும் உயர்வடைந்துள்ளது. ஹைட்டியில் இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 53 000 வீடுகள் முற்றாக இடிந்து தரை மட்டமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிறீஸ் நாட்டை கடந்த 3 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான காட்டுத் தீ தாக்கி வருகின்றது. அந்நாட்டின் 2 ஆவது மிகப் பெரும் தீவான எவியா இனை திங்கள் முதல் இந்த காட்டுத் தீ சூழ்ந்துள்ளது. கிறீஸ் நாட்டின் தீயணைப்பு துறை பல ஹெலிகாப்டர்கள் மூலமும், வீரர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கிறீஸின் பல பகுதிகளில் தீவிரமான வெப்ப அலை வீசி வருகின்றது.
தீயை அணைக்கும் பணியில் ஒரு வீரர் பலியானதாகவும் தெரிய வருகின்றது.