மியான்மாரில் பெப்ரவரியில் ஏற்பட்ட இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின் நிகழ்ந்த பொது மக்களின் எதிர்ப்புப் போரட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டதில் சுமார் 800 பேருக்கும் அதிகமான மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இராணுவத்துக்கு எதிரான செயற்பாடுகளினால் அங்கு இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மூடப் பட்டு பலர் வேலை வாய்ப்புக்களை இழந்தது மாத்திரமன்றி விலைவாசியும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் வாங்க பலருக்கு பணம் இல்லாமல் போய் பட்டினி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் அப்படியே நீடித்தால் இன்னும் சில மாதங்களில் சுமார் 34 இலட்சம் மக்கள் அங்கு கடும் பட்டினியில் தள்ளப் படுவார்கள் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.
கிராமங்களை விட நகரங்களில் இருக்கும் மக்கள் உணவு வாங்கும் சக்தியை இழந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் உடனே தலையிட வேண்டும் என சர்வதேச உணவு அமைப்பான FAO தெரிவித்துள்ளது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
இந்தோனேசிய கடற்பரப்பில் கடந்த 4 மாதங்களாக சிறைப் பிடிக்கப் பட்டிருந்த ஈரான் மற்றும் பனாமா ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்களை சமீபத்தில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது இந்தோனேசியா. ஈரானின் எண்ணெய்யை வாங்குவதற்கு உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததில் இருந்து கச்சா எண்ணெய்யை கள்ளச் சந்தையில் விற்கும் நடவடிக்கையை ஈரான் அவ்வப்போது மேற்கொண்டு வந்தது.
இந்த சட்ட விரோத நடவடிக்கையினைத் தடுத்து நிறுத்தவே ஈரானுக்கு சொந்தமான எம் டி ஹார்ஸ் மற்றும் பனாமாவுக்குச் சொந்தமான எம் டி ஃபிரேயா ஆகிய எண்ணெய்க் கப்பல்களை ஜனவரியில் இந்தோனேசியா அரசு சிறைப் பிடித்தது. மேலும் இவற்றில் இருந்த 36 ஈரானிய மற்றும் 25 சீனப் பணியாளர்களை இந்தோனேசியா கைது செய்தது. இதன் பின் இந்த விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் பின் இரு கப்பல்களதும் மாலுமிகளுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையும், கடலில் கச்சா எண்ணெய்யை கொட்டியதால் எம் டி ஃபிரேயா கப்பலுக்கு
$140 00 அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப் பட்டது.
தற்போது நிபந்தனையுடன் இவ்விரு கப்பல்களையும், கைது செய்யப் பட்ட நபர்களையும் இந்தோனேசிய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.