மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 8000 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து அங்கு ஜூன் 1 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
முழு ஊரடங்கின் போது அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து அனைத்து தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப் படும் என மலேசியப் பிரதமர் முகாயிதின் யாசின் அறிவித்துள்ளார்.
சீனாவின் தெற்கு நகரமான குவாங்சோவில் கோவிட்-19 தொற்று திடீரென அதிகரித்ததன் பின் அப்பகுதியில் சனிக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப் பட்டது. உலகளவில் மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 29.3 கோடி டோஸ்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. உலகில் மிக அதிகளவு கோவிட்-19 தொற்றுக்களையும், உயிரிழப்புக்களையும் சந்தித்துள்ள நாடான அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடென் தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
இரு தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் எவ்வாறு, எங்கு தோற்றம் பெற்றது என்பது குறித்து 90 நாட்களில் கண்டறிந்து தெரிவிக்குமாறு அமெரிக்க உளவு அமைப்புக்களுக்கு அதிபர் ஜோ பைடென் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. உலகளவில் கோவிட்-19 பெரும் தொற்றினால் மிக அதிகளவு உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள 2 ஆவது நாடு பிரேசில் ஆகும். இங்கு கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை 461 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவிட்-19 பெரும் தொற்றை முறையாகக் கையாளவில்லை என்று குற்றம் சாட்டி பிரேசில் அதிபர் பொல்சனாரோவுக்கு எதிராக அங்கு பொது மக்களது எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ரியோ டி ஜெனிரோவில் அண்மையில் 10 000 இற்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பங்கேற்ற மக்கள் தாங்கியிருந்த பதாதைகளில் பொல்சனாரோ தனது அலட்சியப் போக்கால் இனப் படுகொலைக்கு இணையான நிலையை ஏற்படுத்தியுள்ளார் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :
மொத்த தொற்றுக்கள் : 170 668 426
மொத்த உயிரிழப்புக்கள் : 3 549 718
குணமடைந்தவர்கள் : 152 814 696
ஆக்டிவ் தொற்றுக்கள் : 14 304 012
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 91 943
நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)
அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 035 318 : மொத்த உயிரிழப்புக்கள் : 609 421
இந்தியா : 27 894 800 : 325 998
பிரேசில் : 16 471 600 : 461 142
பிரான்ஸ் : 5 657 572 : 109 358
துருக்கி : 5 235 978 : 47 271
ரஷ்யா : 5 063 442 : 121 162
பிரிட்டன் : 4 480 945 : 127 775
இத்தாலி : 4 213 055 : 126 002
ஆர்ஜெண்டினா : 3 732 263 : 77 108
ஜேர்மனி : 3 684 672 : 89 008
ஸ்பெயின் : 3 668 658 : 79 905
கொலம்பியா : 3 363 061 : 87 747
ஈரான் : 2 893 218 : 79 741
போலந்து : 2 871 950 : 73 738
மெக்ஸிக்கோ : 2 411 503 : 223 455
உக்ரைன் : 2 201 472 : 50 472
பெரு : 1 951 651 : 69 202
இந்தோனேசியா : 1 816 041 : 50 404
தென்னாப்பிரிக்கா : 1 659 070 : 56 363
கனடா : 1 376 734 : 25 478
பாகிஸ்தான் : 918 936 : 20 736
பங்களாதேஷ் : 797 386 : 12 549
ஜப்பான் : 741 674 : 12 920
சுவிட்சர்லாந்து : 693 023 : 10 805
இலங்கை : 180 593 : 1405
சீனா : 91 072 : 4636