free website hit counter

காஸா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 900 பேர் வரையில் பலி !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்ததாக, காசா ஸ்டிரிப் பகுதியை ஆளும் ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசா நகரின் மையத்தில் உள்ள அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனைத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது. பிந்திக்கிடைத்த செய்திகளின்படி, இத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 900 வரையில் இருக்கலாம் எனத் தெரியவருகிறது.

காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை பொறுப்பேற்க மறுத்துள்ளது. ஹமாஸ் ராக்கெட் தற்செயலாக கட்டிடத்தின் மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என இஸ்ரேல் இராணுவதரப்புத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இராணுவத்தின் செயல்பாட்டு அமைப்புகளின் ஆய்வு மற்றும் உளவுத்துறை தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் கமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்பட்ட ராக்கெட்டுகள், எதிர்த்து தாக்கப்பட்ட தருணத்தில் மருத்துவமனைக்கு அருகாமையில் விழுந்திருக்கலாம் எனக் கூறியிருக்கின்றார்.

இது "காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகளின்" வேலை, இஸ்ரேல் இராணுவம் அல்ல. காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதல் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செயல் அல்ல, மாறாக பாலஸ்தீனிய "காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகளின்" செயல் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்த்திற்குத் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
அமெரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் அதிபர்களுக்கு இடையே நடைபெறவிருந்த உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜோர்டான் தெரிவித்துள்ளது. காஸா மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையாகப் பாலஸ்தீனத் தலைவர் அபு மசென்தான் பின்வாங்கிய நிலையில் இம்மாநாடு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை, புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வருகைக்கு முன்னதாக, லெபனான் அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிராக "கோபத்தின் நாள்" பிரகடனம் செய்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள இலக்குகளை இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசி தாக்கிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திய காசா நகர மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஒரு தொலைக்காட்சி உரையில் இதனைத் தெரிவித்தார். "மருத்துவமனை படுகொலை எதிரியின் கொடூரத்தையும் தோல்வியின் உணர்வின் அளவையும் உறுதிப்படுத்துகிறது" என ஹனியே கூறினார்.

இந்த தாக்குதல் மோதலில் ஒரு புதிய திருப்புமுனையாக இருக்கும், மேலும் அவர் பாலஸ்தீனிய மக்களை தெருக்களில் இறங்கி ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் குடியேறியவர்களை எதிர்கொள்ள அழைப்பு விடுத்தார்.

மருத்துவமனையைத் தாக்கிய ராக்கெட் ஏவுதல் தோல்வியுற்றதற்கு இஸ்லாமிய ஜிஹாத் பொறுப்பு என இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் இராணுவத்தின் செயல்பாட்டு அமைப்புகளின் ஆய்வு மற்றும் வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து உளவுத்துறை தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவித்துள்ளார்.

காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான இஸ்ரேலிய தாக்குதல் பற்றிய செய்தி ஆத்திரம் மற்றும் எதிர்ப்பு அலைகளை தூண்டுகிறது. டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் ஜோர்டானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்குப் பிறகு அம்மானில் ஜோ பிடனுடன் திட்டமிடப்பட்ட சந்திப்பை PA தலைவர் அபு மசென் ரத்து செய்தார் என்பதை அசோசியேட்டட் பிரஸ்ஸை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலை உலக சுகாதார அமைப்பு (WHO) வன்மையாகக் கண்டித்துள்ளது. "பொதுமக்கள் மற்றும் சுகாதார வசதிகளை உடனடியாகப் பாதுகாக்கவும், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் உத்தரவுகளை திரும்பப் பெறவும் அழைப்பு விடுக்கிறோம்" என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாவதற்கு காரணமான காசா பகுதியில் அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது இஸ்ரேலிய குண்டுவெடிப்பை எகிப்து கடுமையாக கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. கெய்ரோ வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட குறிப்பில், "வேண்டுமென்றே சிவிலியன் வசதிகள் மீது குண்டுவீச்சு சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டத்தின் விதிகள் மற்றும் மனிதநேயத்தின் மிக அடிப்படை மதிப்புகள் ஆகியவற்றின் கடுமையான மீறலாகும் என்று கருதுகிறது. மேலும் காசா பகுதி மக்களுக்கு எதிரான தண்டனை கூட்டு நடவடிக்கைக்கான இஸ்ரேலின் கொள்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.

காஸாவில் வசிக்கும் மருத்துவர் அல் ஜசீராவிடம் தெரிவிக்கையில், மருத்துவமனை இதுவரை பாதுகாப்பான இடமாக கருதப்பட்டு வந்ததாகவும், அதனால் குண்டு வெடிப்பில் இருந்து வெளியேறிய பல குடும்பங்கள் மருத்துவமனையின் சுவர்களுக்குள் தஞ்சம் புகுந்திருந்ததாகவும் கூறினார். ஆபத்தானதாகக் கருதி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அடுத்த நிமிடத்தில் மருத்துவமனையில் இறந்தனர். இந்த தாக்குதலில்ல இறந்தவர்கள் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டும் என்றும் நிட்சயமாக இது ஒரு படுகொலை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் அபு மசென் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

பல மக்களின் உயிரைப் பறித்த காஸாவில் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு சுவிற்சர்லாந்து மத்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை சுவிட்சர்லாந்து மீண்டும் நினைவூட்ட விரும்புகிறது" என அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுனள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula