கால நிலை மாற்றம் காரணமாகவும் கடல் நீரில் மூழ்கும் அபாயம் காரணமாகவும் தமது நாட்டின் தலைநகரை மாற்றப் போவதாக இந்தோனேசிய அதிபர் 2019 ஆமாண்டே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய அரசு தனது நாட்டின் புதிய தலைநகராக 'நுஷாந்தரா' என்ற நகரம் விரைவில் நிர்ணயிக்கப் படும் என அறிவித்துள்ளது.
இதுவரை இந்தோனேசியாவின் தலைநகராக ஜாவா தீவிலுள்ள கடலோர நகரமான ஜகார்த்தா விளங்கி வந்தது. இந்நிலையில் கிழக்கு போர்னியோ தீவிலுள்ள காடுகளால் சூழப் பட்ட கலிமண்டான் பகுதியில் புதிய தலை நகரான 'நுஷாந்தரா' இனைப் புதிதாகக் கட்டி எழுப்புவதற்காகத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தீர்மானம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற பிரதிநிதிகள் மத்தியில் சட்ட ரீதியாக தாக்கல் செய்யப் பட்டது.
திங்கட்கிழமை ஜகார்த்தாவில் இந்தோனேசிய அதிபர் விடோடோ பத்திரிகையாளர் சந்திப்பில், கடந்த 3 வருடங்களாகத் தீவிரமாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வின் பிரகாரமே இந்தோனேசியத் தலைநகரை மாற்றும் தீர்மானம் உறுதியாக எடுக்கப் பட்டதாகத் தெரிவித்தார். ஆயினும் கடந்த பல தசாப்தங்களாக இந்தோனேசியாவின் பல முன்னால் அதிபர்களும் இந்த தீர்மானத்தை மும்மொழிந்தே வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை அங்கீகரித்தால் அடுத்த வருடம் புதிய தலைநகரான நுஷாந்தராவின் கட்டுமானம் ஆரம்பிக்கப் படும் எனத் தெரிய வருகின்றது. ஜகார்த்தாவில் இருந்து கிட்டத்தட்ட 1000 Km தொலைவில் இது அமைந்துள்ளது. தலைநகர் மாறினாலும் ஜகார்த்தாவில் வசிக்கும் 10 மில்லியன் மக்களில் பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து ஜகார்த்தாவில் தான் இருப்பர் என்பதுடன் ஜகார்த்தா தொடர்ந்து இந்தோனேசியாவின் வர்த்தக மற்றும் நிதி மையமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய தலைநகரை அமைப்பதற்கான செலவு சுமார் $32.7 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.