இங்கிலாந்தில் மீண்டும் ஒருமுறை பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர்களின் தடம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இவை 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட 6 வகை டைனோசர்களின் காலடி தடம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. கெண்ட் என்ற நகரின் ஃபோல்க்ஸ்டோன் என்ற பகுதியில் அமைந்திருக்கு மலைக் குன்றுகள் மற்றும் கடற்கரை முகப்புப் பகுதிகளில் தான் இந்தக் காலடித் தடங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
இப்பகுதிகளில் டைனோசர் தடங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது இதுவே முதன்முறை எனத் தொல்பொருள் பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்துள்ளார். 10 கோடி ஆண்டுகளுக்கு முன் கிரெட்டேசிஸ் என்ற காலத்தின் முடிவில் தெற்கு இங்கிலாந்தில் பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்துள்ளன என்பதற்கு அவற்றின் காலடித் தடங்கள் சான்றாக உள்ளன.
ஒரே இடத்தில் இத்தனை காலடி தடங்கள் இம்முறை கண்டு பிடிக்கப் பட்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், உணவுக்காக அல்லது வாழ்விடங்களைத் தேடி இந்த வழிகளின் ஊடாக டைனோசர்கள் பயணித்திருக்கக் கூடும் எனப் பேராசிரியர் டேவிட் மார்டில் கூறுகின்றார்.