வறிய நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைக்காததால், கோவிட் தொற்றுநோய் "தேவையானதை விட ஒரு வருடம் நீடிக்கும்" என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.
உலக முழுவதும் கோவிட் பெருந்தொற்று காலப்பகுதி அடுத்தாண்டுக்கும் எளிதில் இழுத்துச்செல்லப்படலாம் என WHO இன் மூத்த தலைவர் மருத்துவர் ப்ரூஸ் அய்ல்வார்ட் தெரிவித்துள்ளார். இதற்கு ஆப்பிரிக்கா போன்ற சில நாடுகளில் இன்னமும் தேவையான அளவு தடுப்பூசிகள் கிடைக்காதது காரணமாகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்படும் நாடுகளுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை இங்கிலாந்து வழங்கியுள்ள போதும் மற்ற கண்டங்களில் 40% உடன் ஒப்பிடும்போது ஆப்பிரிக்காவின் மக்கள்தொகையில் 5% க்கும் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக செல்வந்த நாடுகள்; தடுப்பூசிகளின் வரிசையில் தங்கள் இடங்களை விட்டுக்கொடுக்குமாறு மருத்துவர் ப்ரூஸ் அய்ல்வார்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பெரும்பான்மையான கோவிட் தடுப்பூசிகள் அதிக வருமானம் அல்லது உயர் நடுத்தர வருமான நாடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உலகளவில் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி அளவுகளில் 2.6% மட்டுமே ஆப்பிரிக்காவில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆக G7 கூட்டம் போன்ற உச்சிமாநாடுகளில் மேற்கொண்ட நன்கொடை கடமைகளை செல்வந்த நாடுகள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.