இந்தியாவுக்கு அருகேயுள்ள சிறிய நாடான பூட்டானின் எல்லை அருகே தனது கட்டுமானப் பணிகளை சீனா தீவிரப் படுத்தியிருப்பதன் மூலம் கிழக்காசியப் பகுதியில் தனது ஆதிக்கத்தை சற்று அதிகரித்திருப்பதாகக் கருதப் படுகின்றது.
சமீபத்தில் அமெரிக்காவின் HawkEye 360 என்ற செய்மதி மூலமான செயற்திட்டம் மூலம் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் மூலமே இவ்விடயம் அம்பலமாகியுள்ளது.
இதன் மூலம் பூட்டான் எல்லை அருகே 6 இடங்களில் 2 அடுக்கு மாடிக் கட்டடங்கள் உட்பட 200 இற்கும் அதிகமான கட்டுமானங்களை சீனா அமைத்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் 2020 ஆமாண்டு முதற்கொண்டே சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் 2021 ஆமாண்டு முதல் கட்டுமானப் பணிகள் துரிதப் படுத்தப் பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சீனாவுக்கும், பூட்டானுக்கும் இடையேயான தரை வழி எல்லைப் பாதை கிட்டத்தட்ட 110 கிலோ மீட்டர்களாகும். சீனாவின் இந்த நடவடிக்கை தொடர்பில் ராய்ட்டர்ஸ் ஊடகம் பூட்டான் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்ட போது, தனது எல்லை தொடர்பான விவகாரங்களை பொது மக்கள் மத்தியில் தெரியும் விதத்தில் வெளிப்படையாகப் பேசுவது பூட்டானின் கொள்கை கிடையாது என்று பதிலளிக்கப் பட்டுள்ளது.
மறுபுறம் சீனாவின் வெளியுறவு அமைச்சோ, இந்த மொத்தக் கட்டுமானமும் அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களது வாழ்வாதாரத்தை விருத்தி படுத்தும் ஒரே நோக்கத்தைக் மாத்திரமே கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.