கோவிட்-19 பெரும் தொற்றின் சமீபத்திய மிக ஆபத்தான திரிபான டெல்டா திரிபின் வருகையின் பின் அமெரிக்காவில் கோவிட் தடுப்பு மருந்துகளின் வீரியம் குறிப்பிடத்தக்களவு குறைந்திருப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் பரிசோதனைப் பிரிவான CDC விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக சுகாதார ஊழியர்கள் மத்தியில் 91% வீதம் வீரியத்துடன் இருந்த கோவிட் தடுப்பூசிகள் தற்போது 66% வீதமாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருந்த போதும் கோவிட் தடுப்பு மருந்துகள் இன்னமும் பாதுகாப்பை அளிக்க வல்லவை தான் என்றும், இவற்றின் வினைத் திறனை டெல்டா திரிபின் வருகையின் பின்னர் துல்லியமாக அளக்க முடியவில்லை என்றும் CDC விளக்கமளித்துள்ளது.
டெல்டா திரிபின் வேகமான பரவலின் பின் நோய்த் தொற்றைத் தடுப்பதில் சில இலக்குகளைத் தடுப்பு மருந்துகள் எட்ட இயலவில்லை என்பதற்கு இஸ்ரேலிலும், பிரிட்டனிலும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் தடுப்பூசிகள் 2/3 பங்கிற்கு அதிகமாக கொரோனா பெரும் தொற்றைத் தடுப்பதால் அவை இன்னமும் முக்கியமானவையாகவே உள்ளன.
டெல்டா திரிபின் வேகத்தைக் கட்டுப் படுத்த அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடென் தலைமையிலான அரச நிர்வாகம், ஏற்கனவே முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு, பூஸ்டர் எனப்படும் 3 ஆவது தடுப்பூசியைச் செலுத்துவது தொடர்பில் அடுத்த வாரம் ஆலோசிக்கவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசிக்கு இதுவரை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை. அநேகமாக செப்டம்பர் 20 ஆம் திகதியளவில் இதற்கு அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.