புதன்கிழமை ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், பிரிட்டனை நோக்கிப் பயணித்த குறைந்தது 31 பயணிகள் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைக் காலத்தில் இப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான படகு விபத்து இதுவென பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார்.
இந்தப் படகில் மொத்தம் 34 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. 5 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்கலாக சுமார் 31 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. இருவர் உயிர் பிழைத்த போதும் ஒருவரைக் காணவில்லை என்றும் கூறப்படுகின்றது. பிரான்ஸில் இருந்து பிரிட்டனை நோக்கி சமீப காலமாக ஆப்கான், சூடான், ஈராக், எரிட்ரியா போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் மிகச் சிறிய நன்கு பராமரிக்கப் படாத படகுகளில் தஞ்சம் தேடி பயணித்து வருகின்றனர்.
இவ்வாறு இடம் பெயரும் அகதிகள் எண்ணிக்கை 2020 ஐ விட இவ்வருடம் 3 மடங்காக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மாத்திரம் வேறு 106 அகதிகள் பிரெஞ்சு கடற் பரப்பில் மீட்கப் பட்டுள்ளனர். சமீபத்திய விபத்து தொடர்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.