சுமார் 396 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்த கரீபியன் தீவு நாடான பார்படோஸ் திங்கட்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கையளிப்பு வைபவத்தின் பின்னர் உலகின் புதிய குடியரசு நாடாக மலர்ந்துள்ளது.
மேலும் பார்படோஸின் தலைநகரான பிரிட்ஜ்டவுனில் இடம்பெற்ற இந்த வைபவத்தின் போது, டாமே சாண்ட்ரா மாசொன் பார்படோஸின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக லிட்டில் இங்கிலாந்து என அழைக்கப் பட்ட கரீபியன் தீவுகளில் செல்வச் செழிப்பு மிக்க வளமான நாடான பார்படோஸ் சுமார் 3 இலட்சம் மக்கள் மாத்திரமே வசிக்கும் சிறிய நாடாகும். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த நாட்டின் அதிகாரப் பூர்வ தலைவராக இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களே இதுவரை இருந்து வந்துள்ளார். 1966 ஆமாண்டு விடுதலை பெற்ற பின்பும் இங்கிலாந்து ராணியைத் தான் தமது தலைவராக பார்படோஸ் அங்கீகரித்து வந்தது.
தற்போது பிரிட்டன் ஆளுகையில் இருந்து முழுமையாக விடுபட்டு புதிய குடியரசாக மலர்ந்துள்ள பார்படோஸின் புது அதிபர் சாண்ட்ரா மாசோனுக்கு வயது 72 ஆகும். திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் இங்கிலாந்து கொடி இறக்கப் பட்டு பார்படோஸின் கொடி ஏற்றப் பட்டு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப் பட்டது. மேலும் பிரிட்ஜ்டவுனில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் புதிய அதிபர் ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது அதிபர் உரையின் போது நாட்டின் எதிர்காலத்தை ஒவ்வொருவரும் வடிவமைக்க வேண்டும் என சாண்ட்ரா மாசோன் வலியுறுத்தினார். பதவியேற்பு வைபவத்தின் பின் பல கலை நிகழ்ச்சிகளும், வான வேடிக்கைகளும் கூட இடம்பெற்றன. இந்த குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டார். பார்படோஸ் புதிய குடியரசாக உதயமாகி இருந்தாலும் பிரிட்டனின் 54 உறுப்பு நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பில் தொடர்ந்து நீடித்திருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.