சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், தாம் யாரையும் பழி வாங்கப் போவதில்லை என்றும், யாரும் அச்சப் படத் தேவையில்லை என்றும், இஸ்லாமிய ஷரியத் சட்டப் படி பெண்களுக்கு முழு உரிமையும் வழங்கப் படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆப்கானில் தமது ஆட்சியானது முழுவதும் ஷரியத் சட்டத்தின் படித் தான் நடக்கும் எனத் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஷரியத் சட்டத்தை மதித்து நடக்கும் பட்சத்தில் பெண்களும் வேலை செய்யலாம் என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானில் இனிவரும் காலத்தில் எந்தளவு ஜனநாயக ரீதியான ஆட்சி நடைபெறக் கூடும் என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. இருந்த போதும் ஆப்கானில் தலிபான்களின் அடக்குமுறைக்குப் பயந்து ஆயிரக் கணக்கான மக்கள் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்கானில் இருந்து வாழ்வாதாரம் தேடி வெளியேறும் மக்களது பாதுகாப்பைத் தலிபான்கள் உறுதிப் படுத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் காபூல் விமான நிலையத்தை சுற்றி தடுப்பு அரண்களை அமைத்துள்ள தலிபான்கள் இதன் மூலம் மீட்பு விமானங்களை மக்கள் சென்றடைவதைத் தடுத்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானின் ஆட்சியைத் தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து 10 000 கணக்கான மக்கள் ஆப்கான் மண்ணை விட்டு வெளியேற முயன்றுள்ளனர்.
இதேவேளை தலிபான்களின் கூட்டணியைச் சேர்ந்த பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது என்ற அமைப்பும் ஆப்கான் ஆட்சியில் அங்கம் வகிக்கத் தலிபான்களுடன் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிய வருகின்றது.