free website hit counter

4தமிழ்மீடியாவின் வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹாவாய் தீவில் உலகின் மிகப்பெரிய ஆக்டிவான எரிமலை சீற்றம்!

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பின்பு அதாவது 1984 ஆமாண்டுக்குப் பின் அமெரிக்காவின் ஹாவாய் தீவருகே உள்ள உலகின் மிகப்பெரிய ஆக்டிவான எரிமலையான மௌனா லோவா சீற்றமடைந்துள்ளது. இது தொடர்பாக திங்கள் மதியம் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்த தகவலில் ஒரு பக்கம் இந்த எரிமலையில் இருந்து கொதிக்கும் லாவா குழம்பு வெளியாகி வரும் போதும் ஹாவாய் தீவின் தேசிய பூங்கா அருகே பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை எனப்பட்டுள்ளது.

ஹாவாயின் வடகிழக்கு பிளவுப் பகுதியில் மாத்திரமே இந்த எரிமலை சீற்றத்தின் வெளிப்பாடு நிகழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஹாவாய் தீவு முழுவதும் காற்றோட்டத்தால் புகை மூட்டமாகக் காணப் படுகின்றது. இதனால் அத்தீவில் உள்ள இரு முக்கிய சர்வதேச விமான நிலையங்களுக்குமே சென்று வரக் கூடிய விமானங்களது பயணங்கள் ரத்து செய்யவோ மாற்றப் படவோ வாய்ப்புள்ளது எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

எரிமலை சீற்றத்தின் புகை மூட்டத்தால் விமானங்களது பயணத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக் குறித்து அமெரிக்க மத்திய ஏவியேஷன் நிர்வாகம் கூர்மையாகக் கவனித்து வருவதாக அறிக்கை விடுத்துள்ளது. இதுவரை எந்தவொரு பகுதியிலும் பொது மக்கள் அப்புறப் படுத்தப் படவில்லை என்ற போதும், முன்னெச்சரிக்கையாக இரு முகாம்கள் ஏற்கனவே திறக்கப் பட்டுள்ளன. மேலும் புகை மூட்டத்தால் ஏற்படக் கூடிய சாம்பல் மழையால் ஏற்படும் வளி மாசு காரணமாக சுவாசக் கோளாறு, கண் மற்றும் நுரையீரல் பாதிப்பு குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இது தவிர இந்த சாம்பல் மழை காரணமாக தண்ணீர் விநியோகத்தில் நச்சுத்தன்மை ஏற்படவும், மின்சாரத் தடை ஏற்படவும், வாகனங்கள் மற்றும் கட்டடங்களில் சேதம் ஏற்படலாம் என்றும் கூட எச்சரிக்கப் பட்டுள்ளது.

 

சீனாவின் கடும்போக்கு ஷீரோ கோவிட் திட்டத்துக்கு பொது மக்கள் பலத்த எதிர்ப்பு!

சீனாவில் ஷீரோ கோவிட் திட்டம் மிகவும் கடுமையாக அரசால் நடைமுறைப் படுத்தப் பட்டு வருவது அங்கு பொது மக்களுக்கு கடும் அழுத்தத்தையும், பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தவிர இரு தசாப்தங்களுக்கும் மேலாக தான் இதுவரை சந்தித்திராத பொது மக்களது பலத்த கோபத்தை சீன அதிபர் ஜீ ஜின்பிங் எதிர் கொண்டுள்ளார்.

மேலும் உலக அளவில் கோவிட் தாக்கம் குறைவடைந்துள்ள போதும் சீனாவில் இந்த ஷீரோ கோவிட் திட்டம் வரும் 2023 ஆமாண்டு தனது 4 ஆவது ஆண்டை எட்டுவதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் கடுமையாக நடைமுறையில் உள்ள சீனாவின் இருபெரும் நகரங்களான பீஜிங்கிலும், ஷாங்காயிலும் பொது மக்கள் பேனர்களுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில பல்கலைக் கழகங்களின் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். 1989 ஆமாண்டு பீஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் இராணுவத்துடன் கடும் மோதல் ஏற்பட்டு பல உயிரிழப்புக்களுடன் வரலாற்றில் மோசமான தடம் பதித்திருந்த அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தை அடுத்து மிக முக்கியமான போராட்டமாக தற்போதைய ஷீரோ கோவிட் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கருதப் படுகின்றது.

இதேவேளை சீனாவில் கோவிட் தொற்றுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அங்கு நவம்பர் 26 ஆம் திகதி மாத்திரம் சுமார் 39 791 புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதுதவிர கோவிட் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக ஜின்ஜியாங்கில் ஒரு உயரமான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறு மற்றும் மக்கள் வெளியேற இருந்த சிரமம் போன்றவை காரணமாக 10 பேர் உயிரிழந்ததும் பொது மக்களது கோபத்தைத் தூண்டி விட்டுள்ளது.

 

அல்ஜீரியாவில் தவறாகக் கும்பல் கொலையில் ஈடுபட்ட 49 பேருக்கு மரண தண்டனை!

2021 ஆமாண்டு அல்ஜீரியாவில் தீயணைப்பைத் தூண்ட வந்ததாகத் தவறாகக் கருதி ஒரு சித்திரக் கலைஞர் கொடூரமாக ஒரு கும்பலால் கொல்லப் பட்டார். இச்சம்பவத்துடன் தொடர்புடையை 49 பேருக்கு அல்ஜீரிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. வடகிழக்கு அல்ஜீரியாவின் கபைலே பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் சமூக வலைத் தளங்களில் பரவி பலரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

மேலும் இச்சம்பவத்தின் போது பேர்பெர் பகுதியில் பரவியிருந்த காட்டுத் தீ காரணமாக சுமார் 90 பேர் பலியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தீயைத் தூண்ட வந்ததாகத் தவறாகக் கருதப் பட்டு சித்திரக் கலைஞர் ஜமீல் பென் இஸ்மாயில் கொல்லப் பட்ட போது அதில் 100 பேர் வரை தொடர்பிருந்ததாகவும், இதில் பலர் தற்போது குற்ற உணர்வுள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூடக் கூறப்படுகின்றது. எனினும் சம்பவத்துடன் தொடர்பு பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்ட பலருக்கு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேவேளை தான்சானியாவில் இந்த வருடத் தொடக்கத்தில் போலிஸ் அதிகாரி ஒருவரது கொலையுடன் தொடர்பு பட்ட தடுப்புக் காவலில் வைக்கப் பட்ட 24 மாசாய் பண்ணையாளர்களுக்கு விதிக்கப் பட்ட கொலைக் குற்றத்தில் இருந்து விடுதலை அளிக்கப் பட்டுள்ளது. ஜூன் மாதம் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் பணியில் இருந்த போலிசார் ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். இதில் சுமார் 62 பண்ணைத் தொழிலாளர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப் பட்டிருந்தது.

 


தமது நாட்டின் தேசிய கால்பந்து அணி வீரர்களது குடும்பத்தினருக்கு ஈரான் அரசு அச்சுறுத்தல்?

தற்போது கத்தாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளில் ஈரான் அணியும் விளையாடி வருகின்றது. இந்தப் போட்டிகளுக்கான பாதுகாப்புத் துறை ஒன்று வெளியிட்ட தகவலில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஈரான் மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு போட்டிக்கான விதிமுறைகளுக்கு ஏற்ப நாட்டின் இறையாண்மையை ஈரான் வீரர்கள் மதித்து நடக்கா விட்டால் அவர்களது குடும்பத்தினர் சிறைத் தண்டனையோ அல்லது சித்திரவதையையோ அனுபவிக்க நேரிடும் என அரசால் அச்சுறுத்தப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக நவம்பர் 21 ஆம் திகதி ஈரானுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்ற ஈரானின் முதலாவது போட்டியின் தொடக்கத்தில் ஈரானின் தேசிய கீதத்தை இசைக்க வீரர்கள் மறுத்ததும், அதன் பின் IRGC எனப்படும் ஈரானில் புரட்சியில் ஈடுபட்டு வரும் குழுவுடன் ஈரான் வீரர்கள் காணொளி வாயிலாக ஒரு சந்திப்பை நடத்தியிருந்ததும் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஈரான் வீரர்களுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ள தகவலில் அடுத்த போட்டியிலும் இவ்வாறு இவர்கள் அவமரியாதையாக தேசிய கீதத்தை இசைக்காமல் விட்டாலோ அல்லது IRGC உட்பட எந்தவொரு புரட்சிக் குழுவுடனும் சேர்ந்து கொண்டாலோ இவ்வீரர்களது குடும்பத்தினர் வன்முறையையும், சித்திரவதையையும் எதிர்நோக்க நேரிடும் என இவ்வீரர்களுக்கு குறித்த பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வேல்ஸ் அணியுடன் இடம்பெற்ற போட்டியின் போது அதன் தொடக்கத்தில் ஈரான் வீரர்கள் தமது தேசத்தின் தேசிய கீதத்தை இசைத்ததும், அப்போட்டியில் வேல்ஸ் அணியினை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் IRGC அமைப்பைச் சேர்ந்த பல அதிகாரிகள் கத்தாரில் ஈரான் வீரர்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஈரான் கால்பந்து அணி வீரர்கள் வெளியே சென்று எந்தவொரு வெளிநாட்டினருடனும் சந்திப்பை ஏற்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் ஈரானின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மிக அதிகளவு அதிகாரிகள் குறித்த வீரர்கள் தொடர்பாக கத்தாரில் தகவல்கள் சேர்த்து வருவதாகவும், கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூடச் செய்தி வெளியாகியுள்ளது.

 

அணுசக்தி ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான சந்திப்பைத் தள்ளிப் போட்டது ரஷ்யா!

செவ்வாய்க்கிழமை எகிப்தில் ஆரம்பமாகவிருந்த அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான இந்த ஆண்டின் முக்கிய அணுசக்தி ஆயுதக் கட்டுப்பாட்டு இணக்கத்துக்கான மாநாட்டை ரஷ்யா சுயேச்சையாகத் தள்ளிப் போட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பே உலகில் இரு பெரும் அணுசக்தி வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணுவாயுத உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் கட்டுப் படுத்தும் ஒரேயொரு முக்கிய சந்தர்ப்பமாகும்.

அதுவும் அண்மைக் காலமாக உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு போர் இடம்பெற்று வரும் நிலையில், இப்போரில் தனது பின்னடவைத் தவிர்க்க ரஷ்யா அணுவாயுதப் பிரயோகத்தை ஆரம்பிக்கும் அபாயத்தை உலக நாடுகள் உணர்ந்து வரும் நிலையில் இப்பேச்சுவார்த்தை இன்னும் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் இருக்கும் BCC என்ற இரு தரப்பு மத்தியஸ்த அமைப்பு இனிவரும் புதிய ஒப்பந்தமான New START Treaty எனப்படும் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தம் வகிக்கவுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய அரச தரப்பு பேச்சாளர் குறித்த இந்தப் புதிய பேச்சுவார்த்தை தொடர்பில் விரைவில் ரஷ்யா புதிய திகதிகளை மும்மொழியும் என்று உறுதிப் படுத்தியுள்ளார். ஆனாலும் திகதியைத் தள்ளிப் போட்டமைக்கான காரணத்தை ரஷ்யா இன்னமும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடைபெற்ற அணுவாயுத கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவும், ரஷ்யாவும் தத்தமது ஆயுதக் கிடங்குகளைப் பரிசோதிக்க ஒப்புக் கொண்டன. ஆனாலும் கோவிட் பெரும் தொற்றுக் காரணமாக 2020 ஆமாண்டில் இருந்து இதுவரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை. மேலும் உலகில் அணுவாயுதத்தை சுமந்து சென்று கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளை அதிகமாகக் கொண்டுள்ள இரு நாடுகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction