இத்தாலி ஒசோலாவில், சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் உள்ள மொந்தே மோரோ (Monte Moro) மலைபகுதியில் இயங்கிய மகுந்நாகா (Macugnaga) கேபிள் கார் தொடரில் நேற்று செவ்வாய்கிழமை காலை 11:25 மணியளவில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக பலர் காயமடைந்தனர். இவ்விபத்துத் தொடர்பான ஆரம்ப அறிக்கைகளின்படி, மொந்தே மோரோ மலை நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், அங்கு ஒரு கேபின் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் வருகைப் பகுதியை அடைந்து பாதுகாப்புத் தடையைத் தாக்கியதாகவும் அறியத்தரப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்தவர்களுக்கு, சம்பவ இடத்தில் இருந்த ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியரால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள், அவசர ஹெலிகாப்டருக்கு மாற்றப்பட்டனர். அவர்களின் நிலைமை உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் அறியவருகிறது.
விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேபிள் கார் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட, அப்பகுதியில் சிக்கித் தவித்த சுமார் 100 பேரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தீயணைப்புப் படை மற்றும் ஹெலிகாப்டர்கள் அழைக்கப்பட்டன. வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு முன்னதாக முடிவடைந்தன. இதில் 94 சுற்றுலாப் பயணிகளும், ஐந்து தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக, அப்பகுதியில் உள்ள பனிச்சறுக்கு சரிவுகளும் மூடப்பட்டதுடன், கேபிள் கார் இயக்கமும் உடனடியாக நிறுத்தப்பட்டது எனவும் அறியவருகிறது.

