free website hit counter

நடந்தது என்ன? நானுஓயா விபத்து

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்
01. அப்துல் ரஹீம் (55)
02. ஆயிஷா பாத்திமா (45)
03. மரியம் (13)
04. நபீஹா (08)
05. ரஹீம் (14)
06. நேசராஜ் பிள்ளை (25) - வேன் சாரதி
07. சண்முகராஜ் (25) - முச்சக்கரவண்டி சாரதி

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவுக்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில் பேருந்து அதிக வேகம் காரணமாகவும் 'பிரேக்' செயற்படாததாலும், நானுஓயா, ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி, பேருந்து சுமார் 50 அடி வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதில் வேனும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்ததோடு, அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு உயிராபத்து ஏதும் நேரவில்லை.

இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், பலத்த காயங்களுக்குள்ளான மாணவர்களை விமானம் மூலம் துரிதமாக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

விபத்து நேர்ந்ததையடுத்து நானுஓயா குறுக்கு வீதி மூடப்பட்டுள்ளது. எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

வெளிப் பிரதேசங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்துவரும் சாரதிகள் நானுஓயா குறுக்கு வீதியை பயன்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்கின்றன. அவர்களுக்கு அவ்வீதியின் தன்மை புரிவதில்லை. எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction