இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளடங்கிய எட்டுப் பேர் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஐந்து கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள், பல கோணத்துப் பயணம். நிலைமை அப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றாக அழைத்துப் பேசுதல் என்பது ஆச்சரியமூட்டும் செய்திதான்.
ஆனால், ஒரு சம்பிரதாயபூர்வ சந்திப்பு என்ற அளவில் இந்தியா விடயங்களைக் கையாண்டிருப்பதால் பிரச்சினையில்லை. அங்கும், தங்களின் தனிக் குணத்தினை தமிழ்த் தலைவர்கள் பிரதிபலிக்கத் தவறவில்லை. ஒரு சம்பிரதாயபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தினை மீறி, மறுபுறத்திலுள்ள ஜெய்சங்கரை பேசுவதற்கோ, பதிலளிப்பதற்கோ இடமளிக்காது, சந்திப்புக்கான ஒட்டுமொத்த நேரத்தையும் தமிழ்த் தலைவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களைக் காணும்போதுதான், இரா.சம்பந்தனின் செயற்பாட்டு அரசியல் வெற்றிடம் உறுத்தலாக வெளித் தெரிகின்றது.
ஜெய்சங்கருடனான சந்திப்பில் சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வயது மூப்பு உபாதைகளினால் இறுதி நேரத்தில் அவரினால் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தால், தமிழ்த் தலைவர்கள் பிரிந்து நின்று 'தான் தான்' என்ற தன்முனைப்பு மனநிலையோடு விடயங்களைப் பேசுவது குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பருமட்டாக சம்பந்தன் விடயங்களை ஒருங்கிணைத்து பேசியிருப்பார். இப்போது, தமிழ்த் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் என்ன செய்தியைச் சொன்னார்கள் என்பது, யாருக்கும் தெளிவில்லை. முப்பது நிமிடச் சந்திப்பில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் முடிவு காணப்படாத தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைத்து நீண்ட நேரம் எடுத்து உரையாடுவதை எப்படி நோக்குவது? முதலில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமும் ஓரணியில் இணைய வேண்டும் என்று கோரும் தரப்புக்கள், அரசியல் - இராஜதந்திர சந்திப்புக்களில் எவ்வாறு ஒருங்கிணைந்து முடிவுகளை எடுத்து பேசுவது என்பதை கற்பிக்க வேண்டும். மாறாக, அந்தச் சந்திப்புக்களை தங்களின் தனிப்பட்ட அரசியல் முடிவுகளை அறிவிப்பதற்கான களமாக தலைவர்கள் கையாளும் சந்தர்ப்பங்களை தவிர்க்கச் செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களை உள்ளக - அயலக இராஜதந்திர, புலனாய்வுத் தரப்புக்கள் இலகுவாக கையாளத் தொடங்கிவிடும். ஏற்கனவே, தமிழ்த் தேசிய கட்சிகளும், அதன் தலைவர்களும் பல தரப்புக்களினாலும் இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவர்களில் சிலர், தனிப்பட்ட உரையாடல்களில் அதனை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். இப்படியான நிலை, தமிழ் மக்களை தொடர்ச்சியாக அரசியல் அனாதைகளாக்கும்.
ஜனநாயக அரசியலில் கருத்து மோதல்கள் அடிப்படையானவை. எதிர்க்கருத்துக்கள் எழாத அரங்கில், எதேச்சதிகாரம் கோலோச்சத் தொடங்கும். அதில் மாற்றுத் கருத்தில்லை. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதற்கான தீர்வு தொடர்பிலான உரையாடல் களத்தில் தங்களுக்கு இடையில் பருமட்டான இணக்கப்பாடாவது இருக்க வேண்டும். அதனை, அரசியல் - இராஜதந்திர சந்திப்புக்களில் வெளிப்படுத்த வேண்டும். இதுதான், தமிழ் மக்களுக்கான தார்மீகமாகும். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளின் பிரதான பேச்சாளராக அல்லது உரையாடல் களத்தின் தலைவராக சம்பந்தன் செயற்பட்டிருக்கிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் தளர்ந்து போயிருக்கிறார். அதனால், ஒருங்கிணைந்த ஆளுமையின் வெற்றிடம் உருவாகியிருக்கின்றது. ஏனெனில், அரசியலில் முடிவு எடுப்பதற்கும், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கும் துணிவு வேண்டும். அது தற்போதுள்ள தமிழ்த் தலைவர்கள் பலரிடமும் இல்லாத ஒன்று. சம்பந்தன் அரசியல் தவறுகளை இழைத்திருந்தாலும், 'அடுத்த தீபாவளிக்குள் தீர்வு' என்ற பிரபல அறிவிப்புக்கு உரியவர் என்ற போதிலும், விளைவுகளை எதிர்கொள்ளும் வல்லமையுள்ள தலைவராக தன்னை அடையாளப்படுத்தினார். ஆனால், தற்போதுள்ள தலைவர்களில் அநேகர், வாக்கு அரசியல் கணக்கினை மாத்திரம் மனதில் இருத்திச் செயற்படுகிறார்கள். அவர்களினால், தூர நோக்குள்ள அரசியல் முடிவுகளையோ உரையாடல்களையோ செய்ய முடிவதில்லை. அதனைத்தான், ஜெய்சங்கருடனான சந்திப்பும் வெளிப்படுத்துகின்றது.
இந்தியா தற்போது தென் இலங்கையோடு மிக நெருக்கமாக பயணிக்கின்றது. அதனை, உறுதி செய்வதில் தென் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளும் கவனமாக இருக்கிறன. கடந்த காலத்தில், ராஜபக்ஷக்கள் இந்தியாவை எதிரியாக முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். ஆனால், 'அரகலய' காலத்துக்குப் பின்னரான ராஜபக்ஷக்களோ, அவர்களின் பொதுஜன பெரமுனவோ இந்தியாவோடு முட்டல் மோதல்களைச் செய்யாது, இணக்கமாக அதுவும் பெரியண்ணனிடம் ஒடுங்கும் தம்பி போன்று செயற்படத் தயாராக இருக்கிறார்கள். வழக்கமாக ராஜபக்ஷக்கள் சீனாவின் விசுவாசிகள் என்பதுதான் வரலாறு. ஆனால், அவர்களின் இறுதி வீழ்ச்சி சீனாவுக்கான அதிவிசுவாசத்தினால் நிகழ்ந்தது என்ற தெளிவு இப்போது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. மறுபுறத்தில், தேசிய மக்கள் சக்தியாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணியோ, இந்திய தூதுவராலயத்தின் அழைப்பினை மிகப்பெரிய விடயமாக பார்க்கத் தொடங்கிவிட்டது. அதுவும் சீனாவின் செல்லப்பிள்ளை என்ற கட்டத்திலிருந்து இந்தியாவுடனான புது நெருக்கத்தை கொண்டாட்டமாக வெளிப்படுத்துகின்றது. ரணிலோ, சஜித்தோ இந்தியாவை ஒருபோதும் எதிர்நிலையில் நின்று கண்டதில்லை. பல நேரங்களில் இந்தியாவின் ஆணைக்காக காத்திருப்பவர்கள். அப்படிப்பட்ட நிலையில், தென் இலங்கையின் அரசியல் தலைமை என்பது இந்தியாவுடனான நெருக்கத்தை அதிகமாக வெளிப்படுத்தி வருகின்றது. அது, இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வுக்கும், அவர்களின் நெருக்கமான வர்த்தகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஆனால், இந்த விடயங்களை புரிந்து கொள்ளாமல், இந்தியா தமிழ் மக்களை கரிசனையோடு பார்ப்பதாக சில தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அரசியல் - இராஜதந்திர நலன்களின் படிதான், யாருக்கு யார் முக்கியமானவர்கள் என்பது முடிவாகின்றது. தென் இலங்கையை கையாளுவதற்காக அதிக தருணங்களில் இந்தியாவுக்கு ஈழத் தமிழர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். ஒரு கருவியாக ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்கு தங்களின் உண்மையான பலத்தினையும் மீறி உதவியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவினால் அதற்கான பிரதிபலன் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கான பதில் எதிர்மறையாகவே இதுவரையில் இருந்திருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் மேலெழுந்தமைக்கு இந்திய அயலக இராஜதந்திர கட்டமைப்பின் செயற்பாடுகள் இருப்பதான குற்றச்சாட்டுகள் உண்டு. அது, இந்தியா விரும்பும் தென் இலங்கைத் தலைவரின் வெற்றிக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் போக்கிலானது என்பது வாதம். இலங்கை அரசியலில் வெளிச் சக்திகளின் தலையீடு என்பது காலம் காலமாக இருப்பதுதான். ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதிலும் அவை பாரிய பங்கினை வகித்திருக்கின்றன. ஏனெனில், பௌத்த சிங்கள பேரினவாதம் அதற்கான வாய்ப்புக்களை தொடர்ச்சியாக உருவாக்கி வந்திருக்கின்றது. அதனை, தென் இலங்கையின் தலைவர்கள் அனைவரும் உணர்ந்தும் இருக்கிறார்கள். அவர்களும் தங்களை நிலை நிறுத்துவதற்கான எந்த வெளிச் சக்தி ஆதரவளிக்கின்றதோ அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அது, இலங்கை சுதந்திரமடைந்தது முதல் தொடரும் நிலை. தற்போது இலங்கையின் வளங்கள் மீது இந்திய பெரு வணிகர்கள் குறிவைத்திருக்கிறார்கள். அதனை எதிர்க்கும் உள்ளூர் தலைவர்களை அரசியல் அரங்கில் இருந்து அகற்றும் இராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தென் இலங்கையை சீனா பெருமளவில் ஆக்கிரமித்துவிட்டது. மீதமுள்ள வளங்களை இந்தியா எடுத்துக் கொள்வதற்கான இசைவை தென் இலங்கை கிட்டத்தட்ட ஒருமுகமாக வழங்கிவிட்டது. இப்படியான நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் இந்திய பெரு வணிகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு யார் உறுத்தலாக முன்னால் வருகிறார்களோ அவர்களை அகற்றும் பணி என்பது கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் என்ற பேரழிவின் பின்னாலும் இந்தியாவை நேச சக்தியாகவே கருதுகிறார்கள். அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால், இந்தியா அப்படி எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
அப்படியான சூழலில், இந்தியா அழுத்தம் செலுத்துகின்றது என்பதற்காக எல்லா விடயங்களுக்கும் தமிழ்த் தலைவர்கள் இசைந்து கொடுக்கும் நிலையில் இருந்து மீள வேண்டும். தமிழ் மக்களின் எதிர்கால இருப்புக்கு என்ன அவசியமோ அதனை நோக்கிய பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும். தென் இலங்கைத் தலைவர்கள் இந்தியாவை பெரியண்ணனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்த் தேசியத் தலைவர்களில் அநேகர், இந்தியாவை தங்களின் ஆண்டனாக பார்க்கிறார்கள். இந்த அடிமை மனநிலை என்பது தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடு. இந்த மனநிலையோடு அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல, சமூகத்தில் தங்களை ஆளுமையுள்ளவர்களாக முன்னிறுத்தும் நபர்களும், கல்வியாளர்களும்,சிவில் சமூக அமைப்புக்களும், அரசியல் பத்தியாளர்களும் இருப்பதுதான் வேதனையானது.முதலில் நாம் யாருக்கான அரசியலை முன்னெடுக்கின்றோம் என்ற தெளிவு அவசியமானது. அதனை மறந்து நின்று என்ன அரசியல் பேசினாலும் அதற்காக எவ்வளவு உசுப்பேற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும், அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. முதலில் அதைத்தான் தமிழ்த் தேசிய அரசியல் களம் உணர்ந்து ஒழுக வேண்டும்.