free website hit counter

பரபரப்பான ஶ்ரீ லங்கா பாராளுமன்றம் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை ஆட்சி நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அரச அதிகார பீடமும், குழப்பமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இன்று காலை 10 மணிக்கு கூடிய . பாராளுமன்ற வளாகத்தின் உள்ளும் புறமும் பரபரப்பாகவே உள்ளது. பாராளுமன்றத்தை சுற்றியிருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கக் கூடும் எனும் அச்சத்தில், அப்பிரதேசங்களில், பொலிஸாரும் மேலதிக, கலகமடக்கும் பொலிஸாரும் உள்ளடக்கிய பல்லடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரம்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அட்சிப் பொறுப்பை ஒப்படைக்கத் தயாராக உள்ளதாக நேற்று ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில், இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ," வரபிரசாதங்களுக்கு நாங்கள் யாரும் அடிபணிய மாட்டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நாமெல்லாம் ஒன்றிணைந்து அந்த முறைமையை ஒழிப்போம்" என்றார்.

இதேவேளை ஜனாதிபதி கோதாபய தலைமையிலான எந்தவொரு காபந்து, தேசிய, சர்வகட்சி, இடைகால அரசாங்கங்களிலும் பங்குபற்றுவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் பங்காளி கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சிகள் தீர்மானித்துள்ளதாக மனோ. கணேசன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சையாக செயற்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கட்சி தலைவர்களுக்காக விஷேட கூட்டத்திற்கு சபாநாயகர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் வருமாறும், இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதெனவும், அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், மத்திய வங்கிக்கு புதிய ஆளுநராக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி Dr. P. நந்தலால் வீரசிங்கவை புதிய ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ. தெரிவு செய்துள்ளார்.

இதேவேளை இன்று இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வழுச்சியடைந்துள்ள நிலையில், நேற்று இனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இன்று காலை துபாய் செல்லும் விமானத்தில் அவர் புறப்பட்டதாகவும், முன்னதாக நேற்றைய தினம் அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மாலைத்தீவிற்கு புறப்பட்டுச் சென்றதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை மேற் கோள் காட்டி, ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தின் கோரிக்கையை புறக்கணித்த நாடாளுமன்றம்

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் அங்கு பேசுகையில், இந்த நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபாய ராஜபக்க்ஷ முன்னிறுத்தப்பட்ட போது அதனை எதிர்த்தவர் நான். அரசியல் அனுபவமற்ற அவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் என்று கூறியபோது மஹிந்த ராஜபக்ச கேட்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான முடிவை எடுத்ததாகவும் அதனால் இன்று முழு நாடும் பற்றி எரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction