இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளைச் சுற்றிலும், மக்கள் குழுமி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரியகிறது.
சமல் ராஜபக்ஷ, ஜனக பண்டார தென்னகோன், ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் வீடுகள் அலுவலகங்களின் முன் மக்கள் குழுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதனால் அப்பகுதியில் வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக தமிழ் சிங்கள மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணக் காரியாலயம் முன்னும் போராட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதே சமயம், எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என முன்னாள் பிரபல அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் வருங்காலத்தில் அமையும் எந்தவொரு அரசாங்கத்திலும் தாம் அமைச்சுப் பொறுப்பினை ஏற்பதில்லை என அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது. இது ராஜபக்ஷ குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இருக்கலாம் எனவும் ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதியிடம் பொது மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள முழு அரச நிர்வாகத்தையும் நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான களத்தை அமைக்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற அசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.