free website hit counter

‘வடக்கிற்கும் தெற்குக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த சதி’: மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் மாவீரர் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் தற்போதைய நிர்வாகத்தின் கீழ். இலங்கையின் வட மாகாணத்திலும் இதேபோன்ற நிகழ்வுகள் இடம்பெறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பிளவு மற்றும் மோதலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பாரிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என எச்சரித்தார்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ததாக அமைச்சர் குற்றம் சாட்டினார். பொய்யான தகவல்களை பரப்பியமை தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு டிசம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், மருதானையைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார், அதேவேளை, பிரச்சாரத்துடன் தொடர்புடைய பொரலஸ்கமுவவைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“குறிப்பாக, செயற்பாட்டாளர்கள் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களது தொடர்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன” என்றும் அமைச்சர் விஜேபால மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula