இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கு சில தெற்காசிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் யூசுப் ராசா கிலானி, இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்வது குறித்து ஆலோசனை பெறுவதற்காக எங்கள் மத்திய வங்கி மற்றும் கருவூலத்தில் இருந்து ஒரு குழுவை அனுப்புமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்," என்று அவர் கூறினார்.
அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறுகையில், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியதற்காக தான் விமர்சிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்தியதன் மூலம் விமர்சகர்கள் தவறு செய்ததை இலங்கை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“கடந்த செப்டம்பரில் எமது ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, பங்களாதேஷ் பிரதமர், இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான தனது நடவடிக்கையை பலர் விமர்சித்ததாகவும், பங்களாதேஷால் அதை தாங்க முடியாது என்றும் இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியாது என்றும் கூறினார். எவ்வாறாயினும், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தியது மட்டுமல்லாமல், வட்டியுடன் செலுத்தியது, அனைத்து விமர்சகர்களையும் தவறாக நிரூபித்துள்ளது," என்று அவர் கூறினார்.
இலங்கை இவ்வளவு தீவிரமான நிலையில் உதவியை நாடுவது இதுவே முதல் முறை என்பதால், இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் பங்களாதேஷ் கடனை வழங்கியதாக பிரதமர் ஷேக் ஹசீனாவும் வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் வெற்றிகரமாகச் சமாளித்தமைக்காக உலகம் இலங்கையை பிரமிப்புடன் நோக்குவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். (4TamilMedia)