ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒக்டோபர் மாத இடைக்கால கொடுப்பனவு ஏன் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படவில்லை என கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான தொகையை அடுத்த வாரத்திற்குள் வரவு வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அரச சுற்றறிக்கை 02/2024, 3,000 இடைக்கால கொடுப்பனவை அங்கீகரித்த போதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.
அக்டோபர் ஓய்வூதியம் ஏற்கனவே ஓய்வூதியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதால், இடைக்கால கொடுப்பனவை ஒரு வாரத்திற்குள் தனித்தனியாக வரவு வைக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, அடுத்த மாதம் முதல் மாதாந்திர ஓய்வூதியத்துடன் அது சேர்க்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். (நியூஸ்வயர்)