free website hit counter

உரிமைகளைப் பாதுகாக்கும் ICCPR சட்டம், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாகும் அவலம்! (புருஜோத்தமன் தங்கமயில்) 

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"...ஒரு பிரதியை (கட்டுரையை) முழுமையாக வாசிப்பதன் மூலமே அதன் பொருள் விளங்கும். ஆனால் என்னுடைய பேஸ்புக் பதிவில் ஒரு சொல்லை மட்டும், பிரித்தெடுத்து அதற்கு பொலிஸார் தமது சுய வியாக்கியானம் வழங்கி நான் கூற வந்ததை முழுமையாக திரித்து, என்னைக் குற்றவாளி ஆக்கினார்கள். எனது பேஸ்புக் பதிவில், இலங்கையில் அரச அனுசரணையுடன் நிகழ்த்தப்படும் இனவாதப் பரப்புரைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் பேனாவையும் விசைப்பலகையையும் பயன்படுத்தி கருத்தியல் ரீதியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றே கூறினேன்..." என்று சமூக செயற்பாட்டாளரான ரம்சி ரசீக் கூறுகிறார்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டத்தின் (International Covenant On Civil and Political Rights (ICCPR) act) கீழ் கைது செய்யப்பட்டு, 5 மாதம் 2 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரம்சி ரசீக், தன்னுடைய கைது நடவடிக்கை தொடர்பில் இந்தக் கட்டுரையாளரிடம் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராகவும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ள குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (ICCPR act) தொடர்ச்சியாக இலங்கையில், முறையற்ற ரீதியில் பொலிஸாரினால் பயன்படுத்துவதான முறைப்பாடுகள் உண்டு. குறிப்பாக, இன - மத சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டத்தினை பொலிஸார் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் தொடரும் குற்றச்சாட்டாகும். இது தொடர்பில், உயர்நீதிமன்றம் கூட, பொலிஸாரை கடிந்து கொண்டிருக்கின்றது.

ICCPR act இன் கீழ் கைது செய்யப்பட்டு, அந்தக் கைது சட்டத்துக்கு முரணானது என்று மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினூடு விடுதலையானவர் ரம்சி ரசீக். அவர், தன் மீதான கைது நடவடிக்கை அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் வெற்றிபெற்றிருக்கிறார். அந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பில், 'பொலிஸார் திட்டமிட்ட ரீதியில் ரம்சி ரசீக்கை கைது செய்வதற்காக ICCPR actஇனை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பதிவை (பிரதியை) முழுமையாக வாசிக்காமல், ஒரு வார்த்தையை எடுத்து அர்த்தத்தை திரித்து, அவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றமை தெளிவாக தெரிகின்றது.' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 02, 2020 ஆண்டு, அனைத்து இனவாத - மதவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் சிந்தனை ரீதியிலான ஜிஹாத்தினை (போராட்டம் (Ideological War)) ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று தன்னுடைய  பேஸ்புக் பக்கத்தில் ரம்சி ரசீக் எழுதினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பேஸ்புக் ஊடாக உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. ஏப்ரல் 09, 2020இல் தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவர் பொலிஸிடம் முறைப்பாடு செய்தார். எனினும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமல், பொலிஸார் அவரை கைது செய்தனர். 

ரசீக்கை கைது செய்து விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார், அவரை, நீதிவான் நீதிமன்றத்தில் பிணை அளிக்கும் அதிகாரமற்ற  குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டத்தின் (ICCPR act) கீழ் நீதிமன்றில் முன்நிறுத்தினர். இதன்போது, பொலிஸார் நீதிமன்றத்தில் "… எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் ஆரம்பத்தில் மக்களின் மனநிலையை மாற்றவே முயற்சிக்கின்றது. ரம்சி ரசீக்கிற்கும் அவ்வாறான சில சொற்களைப் பயன்படுத்தி இனங்களுக்கு இடையே குரோதம் ஏற்படும் விதத்திலான சமூக வலைத்தளப் பதிவுகளை அனைவரும் பாரக்கும்படியாக பொது வெளியில் பதிவிட்டு வந்துள்ளார். இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, 28ஆம் திகதி மற்றும் 2019 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி போன்ற தினங்களிலும் அவர் அதுபோன்ற பதிவுகளை இட்டுள்ளார். அந்தக் கருத்துக்கள் பொது மக்களிடையே குழப்பத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளமை தெளிவாகின்றது...” என்று தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, அவர் நீதிமன்றத்தினால் தடுப்புக் காவலில் (சிறையில்) வைக்கப்பட்டார். அதன் பின்னராக ரம்சி ரசீக், தனது கைதுக்கு எதிராக  மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஐந்தரை மாதங்களுக்குப் பின்னர் பிணைபெற்று விடுதலையானார்.  

"...குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (ICCPR act) என்பது வெறுப்புப் பேச்சுக்கு எதிராகவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் ஐக்கிய நாடுகளினால் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தும் சமவாயச் சட்டம். ஆனால், இலங்கையில், ICCPR act என்பது இன - மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதற்காக அரச இயந்திரத்தினால் பயன்படுத்தப்படுகின்றது. சமூக செயற்பாட்டளர் ரம்சி ரசீக், சட்டத்தரணி ஹியாஜ் ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ICCPR act கீழ் கைது செய்யப்பட்டு, அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த  மதத் தலைவர்கள் சிலர் இனவாதத்தைத் தூண்டி வன்முறைக்கு வழிவகுக்கும் வகையில் பொது வெளியில் வெறுப்புப் பேச்சுக்களைப் பேசினாலும், அவர்களுக்கு எதிராக ICCPR act சட்டம் பாவிக்கப்படுவதில்லை. குறிப்பாக, கலபொட ஞானசார தேரர், அம்பட்டியே சுமண தேரர்  ஆகியோர் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி வருகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை..." என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கிறார். இவர், ரம்சி ரசீக்கின் கைதுக்கு எதிராக, அவர் சார்பில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியிருந்தார்.

"...கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், முஸ்லிம்கள் வேண்டுமென்றே சிங்கள மக்கள் மத்தியில் கொரோனாவை பரப்புகிறார்கள் என்ற விஷமப் பிரச்சாரம் பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது. முக்கியமாக அப்போது நடைபெறவிருந்த தேர்தலை இலக்கு வைத்தே இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலைமையை வளர விட்டால் அது நாட்டிலே மிகப்பெரும் இனமுறுகலை தோற்றுவிக்கும் என்று நான் கருதியதாலேயே முஸ்லிம்கள் உடனடியாக செயற்பட்டு பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவே என்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சிந்தனை ரீதியிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்று எழுதினேன். அந்தப் பதிவு அப்போது இருந்த இனவாத தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாதிப்பாக அமைந்ததால் நான் எழுதுவதை எவ்வாறேனும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் என்னை கைது செய்தனர்..." என்றும் ரம்சி ரசீக் தன்னுடைய கைது தொடர்பில் வெளிப்படுத்துகிறார். 

அத்தோடு, கைது மற்றும் அது தொடர்பிலான வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் தன்னுடைய நாளாந்த வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரம்சி ரசீக் தெரிவிக்கின்றார். "..நான் ஒரு சுதந்திர சமூக ஊடக செயற்பாட்டாளராக தொடர்ந்தும் சமாதானம், நல்லிணக்கம், சக வாழ்வுக்காக எழுதி வருகிறேன். ஆனால் தற்போது சுதந்திரமாக என்னுடைய கருத்துக்களை வெளியிடுவதற்கான அச்சம் உள்ளது. நான் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறேன். மீண்டும் ஏதாவது வழக்கு ஒன்றில் என்னை சிக்க வைத்து கைது செய்யப்படலாம் என்ற அச்சமுள்ளது. நான் கைது செய்யப்பட்டதால், பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் என்னைக் குறித்த பிழையான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.." என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையில் ICCPR actஇன் அறிமுகம்

இலங்கையில் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (International Covenant On Civil and Political Rights (ICCPR) ACT, No. 56 0F 2007), 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது. 

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயம் (International Covenant On Civil and Political Rights (ICCPR)) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1966ஆம் ஆண்டு தீர்மானம் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பதைக் கண்காணிப்பதற்காக, சமவாயத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் குழுவிடம், சமவாயத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள், தமக்கு ஏற்படும் உரிமை மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளைச் செய்து, நீதியைக் கோருவதற்கான ஏற்பாடு சமவாயத்தின் முதலாம் விருப்ப நெறிமுறை (First Optional Protocol to the ICCPR) செய்யப்பட்டது.  1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் சமவாயத்தின் அங்கத்துவ நாடுகள், அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தன.  

இலங்கை, 1980 ஆண்டு ஜுன் மாதம் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்தில் உறுப்பினராகியது.  ஆனாலும், 1997ஆம் ஆண்டுதான் இலங்கை முதலாம் விருப்ப நெறிமுறையில் இணைந்து கொண்டது. அப்போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர், "இலங்கையில் மனித உரிமைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அது தொடர்பிலான  சர்வதேசத்தின் அவதானிப்புக் குறித்து எந்தவித அச்சமும் இல்லை." என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சமவாயத்திடம் இலங்கைச் சேர்ந்த பலர் முறைப்பாடுகளைச் செய்தார்கள். அதில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நல்லரட்ணம் சிங்கராசா, 2001ஆம் ஆண்டு முறைப்பாடு செய்திருந்தார். அவருடைய தனிநபர் முறைப்பாட்டினைக் கேட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு, அவருக்கு சார்பாக 2005ஆம் ஆண்டு தீர்மானம் எடுத்திருந்தது. அதில், சிங்கராசாவின் நியாயமான விசாரணைக்கான உரிமை (சமவாயத்தின் உறுப்புரை 14) மீறப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தது. இதனையடுத்து, அவர் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனைக்கு எதிராக  மீளாய்வு மனுவை இலங்கை உயர்நீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு முன்வைத்தார்.

இந்த மனு தொடர்பிலான தீர்ப்பின் போது, பிரதம நீதியரசரான சரத் என் சில்வா, "...இலங்கையின் நீதி நடைமுறையில் உயர்நீதிமன்றமே அதியுச்சபீடம். அதன் தீர்ப்புகள் தொடர்பாக பிறிதொரு தரப்பிற்கு தீர்மானங்களை அறிவிக்கும் அதிகாரம் இல்லை. சமவாயத்தின் முதலாம் விருப்ப நெறிமுறையை ஏற்றுக்கொண்டு அப்போதைய இலங்கை ஜனாதிபதி (சந்திரிக்கா குமாரதுங்க) இணைந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிடம் நீதி வழங்கும் அதிகாரத்தை வழங்கியமை இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாது."  என்று தீர்ப்பளித்தார். 

சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, சர்வதேச ரீதியில் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனையடுத்துதான், 2007ஆம் ஆண்டு 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (International Covenant On Civil and Political Rights (ICCPR) ACT, No. 56 0F 2007) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்தது.  

ICCPR act கீழ் கைது செய்யப்பட்ட சிலர், 

1. அஃனாப் ஜஜீம், மன்னார் சிலாவத்துறைச் சேர்ந்த கவிஞர். 'நவரசம்' எனும் கவிதை புத்தகத்தில் சிறுவர்கள் மத்தியில் அடிப்படைவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறார் எனும் குற்றச்சாட்டின் கீழ், 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ICCPR act கீழ் கைது செய்யப்பட்டார். 18 மாதங்களுக்குப் பின்னர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிணை வழங்கப்பட்டது. அவர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பை 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புத்தளம் மேல் நீதிமன்றம் வழங்கியது. 

2. அசாத் சாலி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர். முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களை மாத்திரமே மதிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில், 2021ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ICCPR act கீழ் கைது செய்யப்பட்டார். எனினும் அவரை 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றமற்றவர் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.  

3. மஜஹீமா, முஸ்லிம் பெண். கப்பல் சுக்கான் (ship steering wheel) பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த நிலையில், குறித்த பெண் புத்த தர்மச்சக்கரத்தை அவமதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு ICCPR act கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஜுன் மாதம் பிணையில் விடுதலையானார்.

4. ஹிஜாய் ஹிஸ்புல்லா, சட்டத்தரணி. புத்தளத்திலுள்ள முஸ்லிம் மதரசா ஒன்றில் வெறுப்புப் பேச்சினை சிறுவர்களுக்கு மத்தியில் நிகழ்த்தினார் என்ற குற்றச்சாட்டில் 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  மற்றும் ICCPR act இன் கீழ் கைது செய்யப்பட்டார். அவர், 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். 21 மாதங்களுக்கு மேலான தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானார். அவரது வழக்கு இன்னமும் நீதிமன்ற விசாரணைகளில் இருக்கின்றது. 

5. சத்திக்க சத்குமார, எழுத்தாளர். அவர் எழுதிய சிறுகதையொன்றில் பௌத்த பிக்குகளை நிந்திப்பதாக தெரிவித்து, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR act இன் கீழ் கைது செய்யப்பட்டார். நான்கு மாதங்களின் பின்னர், அவர் பிணையில் விடுதலையானார். பின்னரான காலத்தில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது தொடர்பிலான வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் விரும்பாத நிலையில், சத்திக்க சத்குமாரவை நீதிமன்றம் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவரை விடுதலை செய்தது.  அவர் தன்னுடைய கைது நடவடிக்கைக்கு எதிரான அடிப்படை மனித உரிமை வழக்கும் தொடர்ந்திருக்கிறார்

6. நடாஷா எதிரிசூரியா, நகைச்சுவைப் பேச்சாளர்.  "சுத்தோதனவின் மகன் இருக்கிறாரே.." என்ற சொல்லாடலை தன்னுடய நகைச்சுவை மேடைப் பேச்சின் போது குறிப்பிட்டதற்காக புத்தரை அவமதிப்பதாக தெரிவித்து, 2023ஆம் ஆண்டு மே மாதம், ICCPR act இன் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு, மூன்று மாதங்களின் பின்னர் பிணை வழங்கப்பட்டது.வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்று நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்று தாம் நடத்தியதாக உரிமை கோரியது. எனினும் இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தொடர்பில் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் கூறப்படுகின்றன. இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத - மதவாத வெறுப்புப் பிரச்சாரம், சில தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. இதனை, உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடங்கி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்புக்கள் வரையில் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன. அத்தோடு, கண்டித்தும் இருக்கின்றன. இந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், முஸ்லிம் மத சிறுபான்மையினர், ICCPR act கீழ் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடியும். இது, நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்த முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தின் பின்னணியில் நிகழ்ந்தான அச்சம் நிலவுகிறது. ICCPR act கீழ் கைதாகி விடுதலையான ரம்ஸி ரசீக், ஹியாஜ் ஹிஸ்புல்லா ஆகியோர் அந்த விடயத்தை வெளிப்படையாக முன் வைக்கவும் செய்கிறார்கள்.

மத வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்  ICCPR actஇனை பொலிஸார், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அடக்குதவதற்காக பாவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு, தொடர்ந்தும் முன்வைக்கப்படும் நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு ஓகஸ்ட் 29, 2019ஆம் ஆண்டில் கடிதமொன்றை எழுதியது. அதில், "ICCPR சட்டத்தின் பிரிவு 3இன் நியாயமானதும் பற்றுறுதி வாய்ந்ததுமான வினைப்படுத்தலுக்கு பொலிஸ் திணைக்களத்தினால் இந்த வழிகாட்டுல்கள் கரிசனை கொள்ளப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.." என்று சுட்டிக்காட்டியது.  

"...ICCPR act மத வெறுப்பு மற்றும் போர் உள்ளிட்ட ஆயுத வன்முறைகளுக்கான பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், சிறுபான்மையினரின் கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதற்கான கருவியாக,இலங்கையில் ICCPR act கையாளப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸாருக்கு இலங்கையின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் தொடங்கி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புக்கள் வரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஆனால், சிறுபான்மையினருக்கு எதிராக ICCPR act திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தப்படுவது இன்னும் குறையவில்லை..." என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணாந்தன் தெரிவிக்கின்றார்.

அம்பேபிட்டிய சுமண தேரர், தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை அடிக்கடி பேசியிருக்கிறார். ஆனால், அவருக்கு எதிரான ICCPR act சட்டத்தின் கீழ் இதுவரை எந்த வழக்குகளையும் பொலிஸார் பதிவு செய்திருக்கவில்லை. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், சுமண தேரர் ஊடகங்கள் முன்னிலையில், தென் இலங்கையிலுள்ள தமிழ் மக்களை கொலை செய்யப்போவதாக மிரட்டும் வெறுப்புப் பேச்சை பேசினார். ஆனால், அது தொடர்பில் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சுமண தேரரின் வெறுப்புப் பேச்சை சுட்டிக்காட்டியும் ICCPR actஇன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொலிஸ் மா அதிபருக்கு, ஒக்டோர் 27, 2023 அன்று கடிதம் எழுதினார். ஆனால், பொலிஸார் சுமண தேரருக்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. இதனையடுத்து, சில நாட்களின் பின்னர் (நவம்பர் மத ஆரம்பத்தில்) தன்னுடைய வெறுப்புப் பேச்சுக்காக சுமண தேரர் பொதுவெளியில் மன்னிப்புக் கோரினார். 

இதுபோன்ற, பொதுபல சேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானாசார தேரர், தமிழ் - முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சினை தொடர்ச்சியாக பேசி வந்திருக்கிறார்.  ஜுன் மாதம், 2014ஆம் ஆண்டு அளுத்கம நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஞானசார தேரர், எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்து உரையாற்றினார். ஆனாபோதும் அவருக்கு எதிராக பொலிஸார் வன்முறையைத் தூண்டுதல் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான ICCPR actஇன் கீழ் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன் பின்னராக காலப்பகுதியில் அளுத்கமவில் கலவரம் மூண்டது சுட்டிக்காட்டத்தக்கது. 

கூர்ப்படைந்து வருகின்ற மனித நாகரீகத்தில், சட்ட வரையறைகளும் நீதித்துறையும் அது சார்ந்த நிறுவனங்களும் மக்களை நெறிப்படுத்தி குற்றங்கள், வன்முறைகளற்ற சமாதானம் சகவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு மனிதனது அடிப்படை உரிமைகளையும் மதிக்கவும் பாதுகாக்கவுமே மனித உரிமைகள் சார் சட்டங்கள் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டினதும் உள்ளூர் ஒழுங்குக்கு அமைய நிறைவேற்றப்பட்டுகின்றன. ஆனால், அந்தச் சட்டங்களின் உண்மையான நோக்கங்கள் புரிந்து கொள்ளப்படாமல், மக்களின் உரிமைகளை மீறுவதற்காக கையாளப்படுவது என்பது, ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. இலங்கையில், சிறுபான்மையினருக்கு எதிராக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (ICCPR act) தொடர்ச்சியாக கையாளப்படுவது என்பது வெளிப்படையானது. அது தொடர்பில் இந்தக் கட்டுரையில் பல இடங்களில் உதாரணங்களோடு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. ICCPR actஇன் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதனைப் பொலிஸார் உள்ளிட்ட இலங்கையில் அரச கட்டமைப்பின் பிரிவுகள் கையாள வேண்டும். மாறாக, ஏதோவொரு பிரிவினரை அடக்குவதற்காகவோ, அவர்களின் கருத்து உள்ளிட்ட வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறிப்பதற்காகவோ கையாளக்கூடாது. 

*முகப்பு படம்- அவந்த ஆட்டிகல கேலிச்சித்திரம்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction