இலங்கையின் ஜனநாயக சோசலிச அமைப்பின் கொள்கைகளில் இருந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தனது முயற்சிகளில் இருந்து விலகவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 45வது “சார்க் நிதி” ஆளுநர்கள் கூட்டம் மற்றும் கருத்தரங்கின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“எங்கள் நாட்டில் உள்ள ஜனநாயக சோசலிச அமைப்பின் கொள்கைகளில் இருந்து நான் எந்த வகையிலும் விலகவில்லை. உண்மையில், நான் இரண்டு நோக்கங்களை இணைத்துள்ளேன்: அனைத்து குடிமக்களும் போதுமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதை உறுதிசெய்து, சமூக நோக்கங்கள் மற்றும் பொது நலனுக்காக பொது மற்றும் தனியார் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் முழு நாட்டினதும் விரைவான வளர்ச்சியை உருவாக்குதல் எனும் இரண்டு நோக்கங்கள் ஆகும்." ஜனாதிபதி கூறினார்.
பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான தனது அரசாங்கத்தின் முயற்சிகளை விளக்கிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, முயற்சிகள் வெற்றியடைவதற்கு வளர்ச்சி சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார்.
"முதலில், நான் இந்த அரசியலமைப்பிற்குள் செயல்படுகிறேன் என்று சட்டத்தில் பதிவு செய்கிறேன். அரசியலமைப்பின் நோக்கங்களுக்கு புறம்பாக நான் செல்கிறேன் என்று எவரும் கூற முடியாது. இந்த இரண்டு ஏற்பாடுகளும் இலங்கையின் பொருளாதாரக் கொள்கையை மாற்றி எழுதுவதற்குப் போதுமானவை” என்றார்.