free website hit counter

கோட்டா கடற்படை முகாமுக்காக முள்ளிவாய்க்காலில் 617 ஏக்கர் காணி அபகரிப்பு: துரைராசா ரவிகரன்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ கடற்படை முகாமுக்காக அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழ் மக்களின் காணிகள் அவ்வாறு அபகரிக்கப்படுமாயின், மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் இறங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமாக காணிகளை மீண்டும் அளவீடுசெய்து கடற்படைக்கு வழங்க இருப்பதாக காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு துரைராசா ரவிகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை 2017, 2018ஆம் ஆண்டுகளில் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக 2017இல் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அப்போது இந்த அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிகளுக்குரிய தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அதனால் அப்போது அந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

நிலஅளவை செய்வதற்காக 2021.07.29ஆம் திகதி காலை 09.00 மணிக்கு வருகைதந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தங்களினது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும் குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்‌ஷ கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக ஆக்கிரமிப்புச் செய்யும் முயற்சிகளை உரியவர்கள் கைவிடவேண்டும். அந்தக் கடற்படை முகாம் அங்கிருந்து அகற்றப்படவேண்டும். இவற்றுக்கு மாறாக காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால் எமது மண்மீட்புப் போராட்டங்களும் தொடரும்.” என்றுள்ளார்.

முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளிலுள்ள 271,6249 ஹெக்டேயர் விஸ்தீரனமுடைய காணிகள் எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அரசாங்கம் எடுத்துக்கொள்ள இருப்பதாக 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதியன்று வௌியான 2030/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula