இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்கள் கலவரபூமியாக மாறின.
குறித்த இடங்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பெரும் கலவரங்கள் வெடித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதனையறிந்து காலிமுகத்திடலுக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டக் குழுவினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதனால், எதிர்கட்சித் தலைவர் சஜித் பலத்த சிரமத்துக்கு மத்தியில் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை சரிவரத் தெரியவில்லை ஆயினும் இதுவரை 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் மூவர் பெண்கள்.
காலிமுகத்திடலில் ஆர்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த "கோட்டா கோ கம" முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலிமுகத்திடல் கலவரங்களைத் தொடர்ந்து மேல் மாகாணத்திற்கு உடன் அமுலுக்கு வரும்வகையில், மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது குறிப்பில், வன்முறையானது வன்முறையையே உருவாக்கும் எனவும், , மக்களை நிதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நடப்பு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.