இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அலரிமாளினை முன்பாக பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் பதவி விலகியதும் தற்போதைய அமைச்சரவை கலைக்கப்பட்டு சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இன்று நாட்டு மக்களுக்கான விஷேட அறிவிப்பு ஒன்றினை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
அவரது விஷேட அறிக்கையில், அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை எனவும், சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் என்னிடம் இல்லை. அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் எனவும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு எவ்வித தடையின்றி முடிவெடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்றும், நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது, இப்போது நான் என்ன செய்வது என்று உங்களிடம் கேட்கிறேன் என்றும், தெரிவித்துள்ளார்.
இந்நேரத்தில், அலரிமாளிகைக்கு அருகில் திரண்டுள்ள அவரது ஆதரவாளர்கள், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.