இலங்கையின் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலை அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துக் கொண்டதாக அறிய வருகிறது.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடத்தப்படவிருந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில்லையென சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளதாக 11 கட்சிகள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜாங்க அமைச்சர்களாக நியமித்தமை கட்சிகளின் மத்தியில் கடும் அதிருப்தி நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் பொறுமையாக இருக்கவேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்களுக்கான நேற்றைய விஷேட உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது உரையில், இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. அதேவேளை இலங்கை ரூபாயின் பெறுமானம் இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.