free website hit counter

சுதந்திரத்தை தேடுகிறோம்; காணவில்லை: சுதந்திர சதுக்கப் போராட்டத்தில் மனோ கணேசன்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘நாட்டில் சுதந்திரத்தை தேடுகிறோம்; அதனைக் காணவில்லை’ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

‘சுதந்திர சதுக்கத்தில் இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்று சொன்னீர்களே என இவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது. ஏனெனில், தங்கள் துன்பம், துயரம் காரணமாக மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்களை இந்த அரசின் பொலிஸ் படை கைது செய்து, சுய தனிமைக்கு அனுப்புகிறது. ஆனால், நேற்று இந்நாட்டுக்கு அமெரிக்காவில் இருந்து, அலாவுதீனின் அற்புத விளக்குடன் வந்த பெசில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, பல இடங்களில் பலர் கூடி நின்று பட்டாசு வெடித்தார்கள். அவர்கள் மீது ஏன் இந்த கொரோனா சட்டம் பாயவில்லை? அன்று, ஒரே நாடு, ஒரே சட்டம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள். இன்று, பொது மக்களுக்கு ஒரு சட்டம், ராஜபக்சர்களுக்கு ஒரு சட்டமா?” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை எதிரணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தோட்ட தொழிலாளர்கள் வேதனம் இல்லாமல், துன்பத்தில் சிக்கி, நிர்க்கதி நிலையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். இரசாயன கப்பல் அழிவினால், மீனவர்கள் தொழில் இழந்து தவிக்கின்றனர். உரம் இல்லாமல், விவசாயிகள், விளைச்சல் இல்லாமல், வருமானம் இல்லாமல் துன்புறுகின்றனர்.

இதனாலேயே நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் தங்கள் துன்பங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேறு வழி இல்லை. ஆனால், அரசாங்கம் பொலிசை போட்டு, மக்களை கைது செய்கிறது. கொரோனாவை காட்டி, தனிமைப்படுத்துகிறது.

அதேவேளை பஷில் ராஜபக்ச பலரை கூட்டி நிறுத்தி பதவி பிரமாணம் செய்கிறார். அவரை வாழ்த்தி அவரது கட்சி நபர்கள் கூடி நின்று பட்டாசு வெடிக்கிறார்கள். அவர்களை பொலிஸ் கண்டுக்கொள்வது இல்லை. இது என்ன நியாயம்?

இது சுதந்திர சதுக்கம். இங்கே இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. நீங்கள்தானே ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னீர்கள். இன்று மக்களுக்கு ஒரு சட்டம். அரசனுக்கு இன்னொரு சட்டமா?

இலங்கை பொலிஸ் மீது எனக்கு அன்பு இருக்கிறது. ஆனால், அந்த பொலிஸ், அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஆடக்கூடாது. சட்டம் உருவாக்குவது நாடாளுமன்றத்தில் ஆகும். நீங்கள் புது புது சட்டங்களை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்த முயல வேண்டாம். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுங்கள். ஆர்ப்பாட்டங்கள் நின்று போகும்.

இன்று இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்று சேர்த்து, நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்ற இலங்கை நாட்டை உருவாக்குவோம்.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction