அண்மையில் இலங்கையின் கடற்கரை அருகே MV X-Press Pearl எனும் கப்பல் தீ பரவல் ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இதன் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் இக் கப்பலின் எண்ணெய் தாங்கியில் எரிபொருள் எதுவும் இல்லை என நிபுணர்கள் கருதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது இந்த எரிபொருள் எரிந்திருக்கலாம் அல்லது ஆவியாகியிருக்கலாம் என கருதப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்த ஆய்வு செய்து அறிவிக்குமாறு கப்பல் உரிமையாளர்கள் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விபத்துக்குள்ளான கப்பலின் சேதங்களை கணக்கிட ஐ.நா சபையால் குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பாக இலங்கை கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை கூறுகையில் X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்கும் நச்சுப் பொருட்கள் தொடர்பான நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் பகுப்பாய்வு செய்யும் நிபுணர் உள்ளிட்ட ஐ.நா குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடல்வாழ் உயிரினங்கள் சிதைவடைந்து உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமிங்கலம், கடல் ஆமை, டொல்பின் ஆகியவன உயிரிழந்த நிலையில் யாழ், மன்னார், புத்தளம் ஆகிய கடற்கரை பிரதேசங்களில் கரை ஒதுங்கியுள்ளன.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    