free website hit counter

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பு; ஐ.நா.வுக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி கடந்த 12ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்து எதிர்க்கட்சி வரிசையிலுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 

இந்தக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடடவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2009 மே 18இல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது.

இது ஒரு வெட்கக்கேடான மனித குலத்துக்கு எதிரான செயல்பாடு. உலகில் உள்ள எவ்வகையான வலிமை பொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும், நினைவுகளையும் அழிக்க முடியாது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கிறோம். நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula