இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அம்பாறையில் 8 இறப்புகளும், பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக DMC தெரிவித்துள்ளது.
பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் DMC மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 23 மாவட்டங்களில் 99,876 குடும்பங்களைச் சேர்ந்த 335,155 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8,678 குடும்பங்களைச் சேர்ந்த 27,717 பேர் 279 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 18,025 குடும்பங்களைச் சேர்ந்த 61,290 பேர் உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் DMC கூறுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக 1,708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 95 வீடுகள் அழிந்துள்ளன.
மேலும், பதுளை, கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று நண்பகல் 12.00 மணி வரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு மஞ்சள், அம்பர் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் DMC கூறுகிறது.
மேலும், அனுராதபுரம், புத்தளம், குருநாகல், வவுனியா, கண்டி, பதுளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று காலை 06.00 மணிக்கு திறக்கப்பட்டன.
இதன் காரணமாக மகாவலி ஆறு, ஹெட ஓயா, தெதுரு ஓயா, முந்தேனி ஆறு, மல்வத்து ஓயா, கலா ஓயா மற்றும் களனி ஆறு ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, பதுளை, பொலன்னறுவை, குருநாகல், அனுராதபுரம், நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று காலை வரை வீதித் தடைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேரிடர் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக முப்படையைச் சேர்ந்த 2723 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (நியூஸ்வயர்)