பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் இந்திய வீராங்கனை மனு பாக்கர் (Manu Bhaker).
இந்த வெற்றியின் மூலம், இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து இதுநாள் வரையான காலத்தில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் மற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவராகிறார் மனு பாக்கர்.
துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்று விளையாடும் இந்தியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனையான மனு பாக்கர், தற்போது பாரிசில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே ஒலிம்பிக் போட்டிகளில் இவர் சரப்சோத் சிங்குடன் இணை சேர்ந்து கலப்பு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் இவருக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் இந்தியா சார்பாக போட்டியிட்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று, இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டின் உலகத்தரப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற சிறப்பை மனுபாக்கர் பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு மனுபாக்கருக்கு அர்ச்சுனா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அரியானாவின் சச்சார் மாவட்டத்திலுள்ள கோரியா கிராமத்தில் பிறந்த மனு பாக்கர், தற்காப்புக் கலை, குத்துச்சண்டை, வலைப்பந்தாட்டம், பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். 2020 ஆம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க மனு பாக்கர் தகுதி பெற்றார். ஆனாலும் இறுதி நேரத்தில் அவரது வெற்றி வாய்ப்பு பலிக்கவில்லை. அவரது முயற்சியும் காத்திருப்பும், 2024ல் பாரிசில் வெற்றியைத் தந்திருக்கிறது.
"ஒலிம்பிக்கின் ஒரே பதிப்பில் 2 வெண்கலப் பதக்கங்களை வெல்வது ஒரு கனவு நனவாகும். இந்த சாதனை என்னுடையது மட்டுமல்ல, என்னை நம்பி, எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் சொந்தமானது. அனைவரின் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் என்னால் அதைச் செய்திருக்க முடியாது. எனது நாட்டிற்காக மிகப் பெரிய அரங்கில் போட்டியிட்டு வெற்றிகாண்பது மகத்தான பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம்" என மனு பாக்கர் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஜுலை மாதம் 26ந் திகதி ஆரம்பமாகிய ஒலிம்பிக் போட்டிகள், இம்மாதம் 11ந் திகதி நிறைவடைகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில், 21 தங்கப்பதக்ககளைப் பெற்று சீன முன்னிலையிலிருந்த போதும், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மொத்தமாக 74 பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.