பஹ்ரைனின் மனமா நகரில் நடைபெற்றுவருகின்ற 4ஆவது ஆசிய இளையோர் பாரா விளையாட்டு
விழாவில் இலங்கை அணியினர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான ரி 47 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் குளியாபிடிய சூரதூத மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜனனீ விக்ரமசிங்க வெண்கலப் பதக்கம் வென்றார்.
போட்டியை நிறைவுசெய்ய 29.36 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்களுக்கான எப் 41 குண்டெறிதல் போட்டியில் கேட்வே சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த ஜேசன் ஜயவர்தன வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். போட்டியில் அவர் 6.64 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.
இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான எஸ்10 சாதாரண நீச்சல் போட்டியில் ஷலீனா பண்நாயக்க தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டியை அவர் 5 நிமிடங்கள் 25.27 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
ஆண்களுக்கான எஸ் 6-10 சாதாரண நீச்சல் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர் நவீட் ரஷீன் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 5 நிமிடங்கள் 20.59 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    