free website hit counter

உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்தது இலங்கை

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை மற்றும் நமீபியா கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் குழு A இல் இடம்பெற்றுள்ள இலங்கை – நமீபிய அணிகள் T20 உலகக் கிண்ணத்தில் ஆடுகின்ற முதல் போட்டி இன்று (18) அபுதாபி நகரில் தொடங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நமீபிய அணிக்கு வழங்கியிருந்தார். இப்போட்டிக்கான இலங்கை அணி, தனன்ஜய டி சில்வாவிற்கு ஓய்வு வழங்கியிருந்ததுடன் தினேஷ் சந்திமால், லஹிரு குமார மற்றும் குசல் பெரேரா ஆகியோரினை இலங்கை குழாத்திற்குள் இணைத்திருந்தது. தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நமீபிய அணி, நல்லதொரு ஆரம்பத்தினை பெற்ற போதும் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரினை எதிர்கொள்வதில் தடுமாற்றம் காட்டி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

நமீபிய அணியின் பந்துவீச்சு சார்பில் கிரைக் வில்லியம்ஸ் 29 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டம் பெற்ற வீரராக மாற, அணித்தலைவர் கெர்ஹாட் எரஸ்மஸ் 20 ஓட்டங்களை எடுத்திருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் மகீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்க, லஹிரு குமார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 97 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி தொடக்கத்தில் தடுமாற்றம் காட்டிய போதும், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இந்த இருவரினதும் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களுடன் அடைந்தது. இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த, பானுக்க ராஜபக்ஷ 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், அவிஷ்க பெர்னாண்டோ 2 சிக்ஸர்கள் அடங்கலாக 30 ஓட்டங்கள் பெற்று தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

நமீபிய அணியின் பந்துவீச்சு சார்பில் ருபென் ட்ரம்பல்மென், பெர்னாட் ஸ்கொல்ட்ஸ் மற்றும் JJ ஸ்மிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளரான மகீஷ் தீக்ஷன தெரிவாகியிருந்தார். இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி, T20 உலகக் கிண்ணத்திற்கான தமது பயணத்தினை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றது.

இனி இலங்கை அணி T20 உலகக் கிண்ணத்தில் அடுத்ததாக ஆடும் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (20) அயர்லாந்து அணியுடன் நடைபெறவிருக்கின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula