ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற 6 ஆவது மேட்ச்சில் இங்கிலாந்து அணியை 14 ரன்களால் வீழ்த்தி வெற்றி கொண்டது பாகிஸ்தான் அணி.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 5 ஆவது மேட்ச்சில் தென்னாப்பிரிக்காவை அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கி இருந்தது பங்களாதேஷ் அணி. இரு அணிகளுமே 300 ரன்களுக்கு மேல் குவித்திருந்ததும் விசேட அம்சமாகும்.
திங்கட்கிழமை போட்டியின் ஸ்கோர் விபங்களைப் பார்ப்போம். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 348 ரன்களைக் குவித்தது. பேட்டிங்கில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் மொஹம்மட் ஹஃபீஸ் 84 ரன்களைக் குவித்தார். பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மோவேன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் குவித்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும் தளராது போராடியது. ஆனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 334 ரன்கள் மாத்திரமே அது பெற்று 14 ரன்களால் தோல்வியைத் தழுவியது. பேட்டிங்கில் ஜோ ரூட் 107 ரன்களும் ஜோஸ் பட்லெர் 103 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து நேரப்படி காலை 11:30 மணிக்கு இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.