எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஆர் விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆண்கள் பிரிவில் 30 பேர் இடம் பெற்று இருந்தனர். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு இந்த தேர்வு நடைபெற்றது.
முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னணி கால்பந்து வீரர்களான கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். பின்னர் அதில் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஆர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர் எம்பாப்பே இந்த முறை விருதை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அவருக்கும், மெஸ்ஸிக்கும் இடையே தான் அதிக போட்டி இருந்தது. ஆனால், இறுதியில் மெஸ்ஸி வென்று இருக்கிறார்.
எட்டாவது முறையாக பலோன் டி'ஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி. கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றது. அந்த அணியின் கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் இருந்து அந்த அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் லியோனல் மெஸ்ஸி. அவர் 2022 கால்பந்து உலகக்கோப்பையில் ஏழு கோல்களை அடித்து இருந்தார்.
எட்டாவது முறையாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ள மெஸ்ஸி, 2009ஆம் ஆண்டு தன் முதல் விருதை வென்றார். பின் 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021இல் இந்த விருதை வென்று இருக்கிறார்.
பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை ஐடானா பொன்மதி கைப்பற்றினார்.