சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருது விழா ( The Best FIFA Football Awards™) பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் திங்கட்கிழமை (27) இரவு கோலாகலமாக நடைபெற்றது.
இவ் விருதுவிழாவின்போது அதிசிறந்த FIFA வீராங்கனைக்கான விருதை ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனா கழகத்தின் மத்திய கள வீராங்கனை அலெக்சியா பியூடெல்லாஸ் சிகுரா வென்றெடுத்தார். இந்த விருது விழாவில் அதிசிறந்த வீரர், அதிசிறந்த கோல்காப்பாளர், அதிசிறந்த பயிற்றுநர் ஆகிய மூன்று பிரதான விருதுகள் ஆர்ஜன்டீனாவுக்கு கிடைத்தமை விசேட அம்சமாகும்.
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை உலக சம்பியனாக வழிநடத்தியமைக்காக லியோனல் மெஸ்ஸிக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
ஆடவர்களில் அதிசிறந்த பீபா விருதுக்கான வாக்களிப்பில் பிரான்ஸ் வீரர்களான கிலியான் எம்பாப்பே, கரிம் பென்ஸிமா ஆகிய இருவரையும் விட அதிக வாக்குகளை வென்று இந்த மகத்தான விருதை லியனல் மெஸி தனதாக்கிக்கொண்டார். தேசிய அணிகளின் பயிற்றுநர்கள், அணித் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் இந்த விருதுக்கு வாக்களிக்கப்பட்டது.
லியனல் மெஸி இதற்கு முன்னர் FIFA விருதை 2019இல் முதல் தடவையாக வென்றிருந்தார்.
ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனா கழகத்தின் மத்திய கள வீராங்கனை அலெக்சியா பியூடெல்லாஸ் சிகுரா, வருடத்தின் (2022) அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட வீராங்கனையாகத் தெரிவானார்.
அவர் இந்த விருதை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக வென்றெடுத்தமை சிறப்பம்சமாகும்.
வருடத்தின் அதிசிறந்த FIFA ஆடவர் பயிற்றுநர்: லயனல் ஸ்காலோனி (ஆர்ஜன்டீனா).
வருடத்தின் அதிசிறந்த FIFA மகளிர் பயிற்றுநர்: சரினா வீஜ்மன் (இங்கிலாந்து).
வருடத்தின் அதிசிறந்த FIFA ஆடவர் கோல்காப்பாளர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (ஆர்ஜன்டீனா மற்றும் அஸ்டன் விலா).
வருடத்தின் அதிசிறந்த FIFA மகளிர் கோல்காப்பாளர்: மேரி இயர்ப்ஸ் (இங்கலாந்து மற்றும் மென்செஸ்டர் யுனைட்டட்).
வருடத்தின் மிகவும் அற்புதமான கோலைப் புகுத்திய வீரருக்கான FIFA புஸ்காஸ் விருது: மாசின் ஒலெஸ்கி (போலந்து மற்றும் வாட்டா பொஸ்னான் கழகம்)