இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (20) ஆர்.பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு ஏமாற்றகரமான போட்டியை இந்தியா பரிசளித்தது.இந்திய இளம் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எற்ற வகையில் கைப்பற்றியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட முடிவுசெய்தது.இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியினை சந்தித்த காரணத்தினால் ஒருநாள் தொடரினை தக்கவைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் ஒரு மாற்றத்தினை மேற்கொண்டது. அதன்படி இசுரு உதானவிற்கு பதிலாக கசுன் ராஜித இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய அணி முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியது.
இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனது கன்னி ஒருநாள் அரைச்சதத்தினைப் பதிவு செய்த சரித் அசலன்க 68 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பதிவு செய்ய, அவிஷ்க பெர்னாந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாமிக்க கருணாரட்ன 5 பௌண்டரிகள் அடங்கலாக 33 பந்துகளுக்கு 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்க, தீபக் சாஹர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 276 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி, சிறப்பான ஆரம்பத்தினை காட்டிய போதும் துரித கதியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு கட்டத்தில் போட்டி இலங்கை அணியின் கைக்கு சென்றது.
எனினும், பின்வரிசையில் களமிறங்கிய தீபக் சாஹர் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த இந்திய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களுடன் அடைந்தது.இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரின் பந்துவீச்சு இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இந்திய அணிக்காக தீபக் சாஹர் பெற்றுக்கொண்டார். இனி, இரண்டு அணிகளும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (22) நடைப்பெற உள்ளது.