free website hit counter

ஆஷஸ் முதல் டெஸ்ட்: இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று  முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 

பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வூட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பிறகு இரண்டாவது இன்னிங்க்சை ஆட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹமீத் 27 ரன்களிலும் ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 220 ரன்கள் குவித்திருந்தது. டேவிட் மலன் 80 ரன்களிலும் ஜோ ரூட் 86 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

இன்று நான்காம் நாள் தொடங்கியது. ஆஸ்திரேலியா அணிக்கு அதிக ரன்கள் இலக்காக வைக்கப்படும் என்று எதிர் பார்த்த நிலையில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மலன் (82), ஜோ ரூட்(89) அடுத்தடுத்து வெளியேறினர். 

அந்த ஜோடி அணிக்கு நம்பிக்கை அளித்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இறுதியில் இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி 19 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹேரி, மார்க்கஸ் ஹரிஸ் களமிறங்கி ஆடினார்.

அலெக்ஸ் ஹேரி 9 ரன்கள் எடுத்த நிலையில் ராபின்சன் ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக மார்னஸ் லாபஸ்சேன் களமிறங்கினார்.

5.1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 20 எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்னஸ் லாபஸ்சேன் (0), மார்க்கஸ் ஹரிஸ்(9) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிக்களுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 16-ந் திகதி அடிலெய்டில் நடைபெறும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction