ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் 146 ஒருநாள், 103 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி உள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலிய அணியை 76 டி20 மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை (2015) மற்றும் டி20 உலகக்கோப்பை (2021) வென்ற போது அணியில் அங்கம் வகித்தார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் மூலம் அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அரங்கில் கால் பதித்த பின்ச் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 278 ரன்னும், 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5406 ரன்னும், 103 டி220 போட்டிகளில் ஆடி 3120 ரன்னும் அடித்துள்ளார். இவர் மேலும் 92 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2091 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் பின்ச் ( 172 ரன்) என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு தொடர்பாக ஆரோன்பிஞ்ச் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட மாட்டேன். இதை உணர்ந்துதான் ஓய்வு முடிவை எடுத்தேன். கேப்டன் பதவியில் இருந்து செல்வதற்கு இதுவே சரியான தருணம். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன்.