பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இத்தாலியின் சார்பில் கலந்து கொண்ட தடகள வீரர் ரிஜீவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கம் வென்றார்.
F52 வட்டு எறிதலுக்கான போட்டியில் முன்னைய உலக சாதனைகளையெல்லாம் முறியடித்துப் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
ஸ்டேட் டி பிரான்ஸில் நடைபெற்ற போட்டியில், அவர் தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். பின்னர் சிறிது நேரத்தில், 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். அதன் பின்னர் இறுதியாக, 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இப்போட்டியில் தனது மூன்றாவது உலக சாதனையுடன், இத்தாலிக்கான தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

ரிஜீவன் கணேசமூர்த்தி 1999 இல் ஈழத் தமிழ் பெற்றோருக்கு ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது, இது தசை பலவீனம் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் உள்ள உணர்ச்சி மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது. 2019 இல் அவரது உடல்நிலை மோசமடைந் து, ரோமில் உள்ள சாண்டா லூசியா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அதன் பின்னர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுத்த அவர், 2023 இல், ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் களப்போட்டிகளில் பங்கு கொண்டு, F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார்.
பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமாகிய ரிஜீவன், அவரது மூன்றாவது சர்வதேசப் போட்டியில் புதிய உலகசாதனையுடன் தங்கம் வெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    