website analysis

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நிலைப்பாட்டில் விசிகவுக்கு உடன்பாடில்லை: திருமாவளவன்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திருப்பரங்குன்றம் அளவைக் கல்லில் தீபமேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நிலைப்பாட்டில் விசிகவுக்கு துளியும் உடன்பாடு இல்லை என அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'(சிஐஎஸ்எஃப்) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.

அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.

நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.

எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன்.

வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்