தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் அவர் டெல்லிக்கு விஜயம் செய்யும் முதல் பயணம் இது.
இரு நாள் உத்தியோகபூர்வமான பயணம் மேற்கொண்டு டெல்லி சென்றுள்ள அவர் இன்று மாலை 5 மணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் எனத் தெரியவருகிறது.
இச் சந்திப்பின் போது, நீட் தேர்வு விவகாரம், ஜிஎஸ்டி நிலுவை தொகை, கொரோனா தடுப்பூசி, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர் சந்திப்பும், நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரையும், மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்திப்பார் என அவரது நிகழ்நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி விமானம் மூலம் டெல்லி வந்த முதல்மைச்சர் முக ஸ்டாலினை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.