கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர்.
இதற்காக கர்நாடகாவின் பெங்களூருவில் கன்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன. கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்து உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கும், கவர்னர் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.
அவர்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே, கட்சியின் எம்.எல்.ஏ.க்களான ஜி. பரமேஷ்வரா மற்றும் எம்.பி. பாட்டீல் உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர, பிற எம்.எல்.ஏ.க்களான முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, ராமலிங்க ரெட்டி மற்றும் ஜமீர் அகமது கான் உள்ளிட்டோரும் இன்று முறைப்படி மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.
கடந்த 2013-ம் ஆண்டு முதன்முறையாக இந்த ஸ்டேடியத்திலேயே, சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று கொண்டார். இதன்பின் அவர் இன்று 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டு உள்ளார். அவருடன், டி.கே. சிவக்குமார் துணை முதல்-மந்திரியாக இன்று பதவியேற்று கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத்திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.