free website hit counter

ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ரூ.18 கோடியில் சீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,

சென்னை செனாய்நகரில் செயல்பட்டு வந்த திரு.வி.க. பூங்கா கடந்த 2011-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக மூடப்பட்டது.

மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த நிலையில் 2018-ம் ஆண்டு இந்த பூங்கா பெருநகர சென்னை மாநகராட்சி வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் ரூ.18 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது.

இதன் காரணமாக மனதை மயக்கும் செயற்கை வண்ண நீரூற்று, ஆண், பெண்களுக்கென தனித்தனியாக அதிநவீன பயிற்சி கூடங்கள் என 9 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் இந்த பூங்கா புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன்பின்பு, அங்குள்ள கல்வெட்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து பேட்டரி காரில் அமர்ந்தபடி பூங்காவை சுற்றி பார்த்தார். அங்கு செய்யப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பூங்காவை முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மிக சிறந்த முறையில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளதற்காக அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மோகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் சித்திக், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங்பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 20 நிமிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்காவை சுற்றி பார்த்தார். இதன்பின்பு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து பார்வையாளர்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வண்ண விளக்குகளுடன் ஜொலித்த பூங்காவை மக்கள் ரசித்து பார்த்தனர். அதிநவீன வசதிகளுடன் மிக சிறப்பான முறையில் பூங்காவை மறு சீரமைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த பூங்காவில் 8 வடிவ நடைபாதை, இசை நீரூற்று, பூப்பந்து, கூடைப்பந்து, பீச் வாலிபால் மைதானம், கிரிக்கெட் பயிற்சி மையம், யோகா மையம், படிப்பகம், குழந்தைகள் பூங்கா, சறுக்கு பயிற்சி, பல வண்ண செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பெண்களுக்கு தனியாக கூடைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து மைதானங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

அதேபோன்று பூங்காவில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் இளைப்பாற நவீன வசதிகள் கொண்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction