ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு எதிராக கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா, ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதனால், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முன்வைத்து வருகிறது.
ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தனது செயலை நியாயப்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் இந்தியா- அமெரிக்கா வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடியுடன் விரைவில் பேச இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: இருநாடுகளுக்கு இடையேயன வார்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, டிரம்ப் உடன் பேச ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. இரு நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இந்திய- அமெரிக்கா கூட்டணியில் எல்லையற்ற திறனை வெளிப்படுத்தும் என நம்புகிறேன். இந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க இரு தரப்பும் முயன்று வருகின்றன. நானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புடன் பேச ஆவலாக இருக்கிறேன். இது இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த மற்றும் வளமான எதிர்காலத்தைத் தரும். இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.