தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ள பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனல் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மஹிரா கான், ஹனியா அமிர் மற்றும் சஜால் அலி உள்ளிட்ட பாகிஸ்தானின் முன்னணி நடிகர்களின் யூடியூப் சேனல்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
பாகிஸ்தானின் டிஜிட்டல் தலையீட்டை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலை நிறுத்தி வைப்பக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக நாட்டின் பாதுகாப்பை இந்திய அரசு கருதுகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தவறான கருத்துக்களை உருவாக்கி பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான பெரிய அளவிலான நடவடிக்கையாக யூடியூப் முடக்கம் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் முடக்கம் என்பது இந்தியாவின் டிஜிட்டல் கொள்கையின் பதிலடியின் ஓர் அங்கமாக, ஏற்கனவே இதேபோல் முடக்கப்பட்ட பல பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளுடன் சேர்ந்த ஒரு கூட்டு நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் முடக்கம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான தூதரக ரீதியிலான உறவை மேலும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பாபர் அஸாம், மொகம்மது ரிஸ்வான், ஷாகித் அஃப்ரிடி மற்றும் பாகிஸ்தானின் முன்னணி நடிகர் நடிகைகளின் சமூக ஊடக கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனலைத் தவிர பாகிஸ்தானின் 16
முன்னணி யூடியூப் சேனல்களும் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள முன்னணி செய்தி சேனல்களான டான், சாமா டிவி, அரி நியூஸ் ஜியோ நியூஸ் மற்றும் போல் நியூஸ் போன்றவைகளின் யூடியூப் சேனல்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக சுமார் 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இந்த யூடியூப் சேனல்கள், இந்தியா மற்றும் அதன் பாதுகாப்பு படைகளுக்கு எதிரான தவறான கருத்துகளை பரப்புவதாக குற்றம்சாட்டுப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் இந்திய அரசு அதிரடி நவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் பலவும்
ஆதரவு குரல் கொடுத்துவரும் நிலையில், பயங்கரவாத தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்படும் என இந்தியா தரப்பில் மத்திசம் நாடுகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.