free website hit counter

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவும், இறுதி அஞ்சலியும் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவின் நைட்டிங்கேல் எனும் மரியாதைக்குரிய பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவரது 92வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானர்.

லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை பயணம்

இந்தியாவின் ‘இசைக் குயில்’ என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் அவர்கள், 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பிறந்த லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞர். தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கியவர் பின்னர், புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.

தனது 13 வயதில் இசைப்பயணத்தை தொடங்கிய லதா மங்கேஷ்கர், 1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கி, அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

அவருக்குக் கிடைத்துள்ள விருதுகளும் அங்கீகாரங்களும் வரிசையில், 1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது”, 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது, 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.

1975 ம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருதும்,1989 ம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” ம், 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருதும், 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது, 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது. 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” என்பன வழங்கப்பெற்றது.

1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது, 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பெற்றது.

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மறைந்த லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை 6.30 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதற்காக, ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அவருக்கு கவுரவும் அளிக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்களை இசைக்க மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction