free website hit counter

கரூர் நெரிசல் பலி: நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த கோரச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அஞ்சப்படுகிறது. பலியோனரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (செப். 27) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன்.

விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும்.

நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula