அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, உயர்கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், பெரிய கனவுகளை காணவும், புதுமைகளை உருவாக்கவும், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்யவும் தான் நாம் இங்கு கூடியுள்ளோம் என்றும் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையும், நமது மாநில வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முக்கியமான காலகட்டத்தில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வருகிறது என்றும் அதற்காக சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வது, புதிய உலகத் தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அப்போது குறிப்பிட்டார்.
நாம் உருவாக்கும் மாற்றங்களின் பயன் மாணவ செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் உயர்கல்வி துறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து, புதிய துடிப்பான தமிழகத்தின் அடித்தளமாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது எனவும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.